மத்திய அரசு அமல் செய்த லாக்டவுன்: அடுக்கடுக்காக விமர்சித்த ராஜிவ் பஜாஜ்!

"இந்தியாவில் அமல் செய்யப்பட்டது போல ஒரு ஊரடங்கு உத்தரவு வேறு எந்த தேசத்திலும் அமல் செய்யப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்"

'கொரோனா வைரஸைக் குறைக்கப் போடப்பட்ட இந்த முழு முடக்க உத்தரவு, இந்தியப் பொருளாரத்தைக் குலைத்துவிட்டது. ஜிடிபி-ஐக் குறைத்துவிட்டது.'

ஹைலைட்ஸ்

  • ராகுல் காந்தியோடு கலந்துரையாடினார் ராஜிவ் பஜாஜ்
  • ஊரடங்கு அமல் செய்ததிலும் பல ஓட்டைகள் இருந்தன: பஜாஜ்
  • ஊரடங்கு பொருளாதாரத்தை குலைத்துவிட்டது: பஜாஜ்
New Delhi:

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பல்வேறு வல்லுநர்களோடும் பிரபலங்களோடும் வீடியோ கான்ஃபரென்ஸ் மூலம் பேசி வருகிறார். அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாராத்தில் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்டோரோடு ஊரடங்கு உத்தரவு குறித்தும் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்தும் பேசியிருந்தார். தற்போது அவர் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த விவாதத்தின்போது பஜாஜ், மத்திய அரசு அமல் செய்த முழு முடக்க நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தார். 

அவர், “மிகக் கடுமையான முழு முடக்க நடவடிக்கையை நாம் அமல் செய்யப் பார்த்தோம். அப்படியும் அதில் நிறைய ஓட்டைகள் இருந்தன. இதனால் இரு பக்கமும் நமக்கு பாதிப்பு ஏற்பட்டன. முடக்க நடவடிக்கைகள் சரியாக இல்லாத காரணத்தால் வைரஸ் தொற்றையும் கட்டுப்படுத்த முடியவில்லை. பொருளாதாரமும் பெருமளவு அடி வாங்கியுள்ளது. எப்போது நாம் முடக்க நடவடிக்கைகளை தளர்த்தினாலும் அப்போது வைரஸ் தொற்று வேகமாக பரவக் காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படவில்லை.

கொரோனா வைரஸைக் குறைக்கப் போடப்பட்ட இந்த முழு முடக்க உத்தரவு, இந்தியப் பொருளாரத்தைக் குலைத்துவிட்டது. ஜிடிபி-ஐக் குறைத்துவிட்டது.

இந்தியாவில் அமல் செய்யப்பட்டது போல ஒரு ஊரடங்கு உத்தரவு வேறு எந்த தேசத்திலும் அமல் செய்யப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். இப்போது சிறிதாக சிறிதாகவும் தளர்வுகள் அமலாகவில்லை. மிகத் தீவிரமாக தளர்வு நடவடிக்கைகள் அமலாகியுள்ளன,” என்று விரிவான கருத்தைத் தெரிவித்தார். 

உரையாடலின்போது, “ராகுல் காந்தியோடு நான் விவாதிக்கப் போகிறேன் என்று சொன்னபோது, ‘ஏன் செய்கிறாய்? அது உனக்கு நல்லதல்ல?' என்றுதான் எல்லோரும் சொன்னார்கள்” என்று தெரிவித்தார். நாட்டில் சுதந்திரமாக பேச அச்சம் நிலவுவதாக இருவரும் தெரிவித்தனர். 

ராகுல் காந்தி பேசுகையில், “இதைப் போன்ற ஊரடங்கு உத்தரவினால் மக்கள் மனதில் இறப்பு குறித்த பயம் ஊடுருவிவிடும். அதை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. மேலும் முழு முடக்க நடவடிக்கையானது உடனடியாக அமல் செய்யப்பட்டுவிட்டது. பணக்காரர்களுக்கு இதைப் போன்ற லாக்டவுன் மூலம் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அவர்களுக்கு வீடு உள்ளது. மிக சொகுசான சூழல் உள்ளது. ஆனால் ஏழை மக்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த நடவடிக்கைப் பெரும் துயரைத் தந்துள்ளது. இப்போது நாம் நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். பொருளாதாரம் இல்லை என்றால், ஒன்றுமே இல்லாமல் போய்விடும்,” என்று கொதிப்புடன் பேசினார்.