This Article is From Jul 08, 2020

காந்தி குடும்ப அறக்கட்டளையில் முறைகேடு: விசாரணையை கையாள மத்திய அரசு குழு அமைப்பு!

Gandhi family trusts: ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றால் வருமான வரி மற்றும் வெளிநாட்டு நன்கொடை விதிகளை மீறியது தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்க உள்துறை அமைச்சகம் ஒரு அமைச்சக குழுவை அமைத்துள்ளது

Gandhi family trusts: காந்தி குடும்ப அறக்கட்டளைக்கு எதிரான விசாரணையை கையாள மத்திய அரசு குழு அமைப்பு!

New Delhi:

காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய மூன்று அறக்கட்டளைகள் நிதி நடவடிக்கையில் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அதனை விசாரிப்பதாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. 

ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றால் வருமான வரி மற்றும் வெளிநாட்டு நன்கொடை விதிகளை மீறியது தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்க உள்துறை அமைச்சகம் ஒரு அமைச்சக குழுவை அமைத்துள்ளது என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று ட்வீட் செய்துள்ளார். 

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக ட்விட்டர் பதிவில், காந்தி குடும்பத்தால் நடத்தப்படும் அறக்கட்டளைகளால் பணமோசடி தடுப்பு சட்டம், வருமான வரி மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு போன்ற சட்டங்களை மீறியது தொடர்பான விசாரணையில் கவனம் செலுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விசாரணை குழுவிற்கு அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு இயக்குநர் தலைமை தாங்குவார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சி 'வெட்கக்கேடான மோசடியில்' ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது. ஆட்சியில் இருந்தபோது, மன்மோகன் சிங் அரசு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம் வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமரின் தேசிய நிவாரண நிதி என்பது, பாதிப்படைந்த மக்களுக்கு உதவுவதற்கானது, அதிலிருந்த பணத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துள்ளது. பிரதமர் தேசிய நிவாரண நிதியகத்திற்கு தலைமை பொறுப்பில் இருந்தவர் யார்? சோனியா காந்தி. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைமை பொறுப்பில் இருந்தவர் யார்? சோனியா காந்தி. நெறிமுறைகள், செயல்முறைகளை புறக்கணித்து வெளிப்படைத்தன்மையை பற்றி கவலைப்படாதது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைமை பொறுப்பில் சோனியா காந்தி உள்ளார். அவரை தொடர்ந்து, அந்த குழுவில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் உள்ளனர். 

இதேபோல், 1991ல் பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், ரூ.100 கோடி வரை ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ஒதுக்கியதாகவும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது. 

எனினும், சீன நெருக்கடியில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் இந்த குற்றச்சாட்டுகளை தங்கள் மீது பாஜக முன்வைப்பதாக காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். 
 

.