This Article is From Nov 25, 2018

“ராமர் கோயிலை கட்டும் தேதியை அறிவியுங்கள்”- மத்திய அரசுக்கு சிவசேனா நெருக்கடி

அயோத்திக்கு சென்றுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோயிலை கட்டும் தேதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

அயோத்தில் சிவசேனாவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

New Delhi/Ayodhya:

அயோத்திக்கு சென்றுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ராமர் கோயிலை கட்டும் தேதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உத்தர பிரதேசத்தில் தனது குடும்பத்தினருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது மனைவி ராஷ்மி மகன் ஆதித்யா ஆகியோருடன் சரயு நதி அருகே நடைபெற்ற ஆரத்தி விழாவில் பங்கேற்றார்.

ராமர் கோயிலை கட்ட வலியுறுத்தும் நோக்கில் சிவசேனா கட்சி தலைவர் உத்தர பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ஆயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் ராம லீலா தரிசனத்திற்காக சென்றுள்ளனர். விழாவின்போது பேசிய உத்தவ் தாக்கரே, “ முதலில் ராமர் கோயில் கட்டும் தேதியை மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவிக்கட்டும். நடக்க வேண்டிய மற்றவற்றை நாம் பின்னர் பேசுவோம். ராமர் கோயிலை அயோத்தியில் கட்டுவோம் என்றுதான் பாஜக கூறி வருகிறது. ஆனால் தேதியை அறிவிக்கவில்லை” என்று கூறினார்.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உத்தவ் தாக்கரே இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நாளை ராமர் கோயில் ஆதரவாளர்களை திரட்டி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தியில் மாநாடு நடத்த உள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என வி.எச்.பி. அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையொட்டி, 35 சீனியர் போலீசார், 160 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவத்தினரும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.