This Article is From Jun 30, 2020

முகக்கவசம் அணிய கூறிய மாற்றுத்திறனாளி பெண் மீது அரசு ஊழியர் கடும் தாக்கு!

Andhra Pradesh: இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, முகக்கவசம் அணியாததை சுட்டி காட்டி, அந்த பெண் அவரிடம் முகக்கவசம் அணியும் படி வலியுறுத்தியுள்ளார்.

Nellore: முகக்கவசம் அணிய கூறிய மாற்றுத்திறனாளி பெண் மீது அரசு ஊழியர் கடும் தாக்கு!

Nellore:

மாற்றுத்திறனாளி பெண் ஒப்பந்த ஊழியரை சரமாரியாக தாக்கியது கேமராவில் பதிவானதை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆந்திர பிரதேச சுற்றுலா துறையின் துணை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, முகக்கவசம் அணியாததை சுட்டி காட்டி, அந்த பெண் அவரிடம் முகக்கவசம் அணியும் படி வலியுறுத்தியுள்ளார். இதில், ஆத்திரமடைந்தவர் அவரை பதிலுக்கு கடுமையாக தாக்கியுள்ளார். இதில், அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவின் நெல்லூரில் ஜூன் 27ம் தேதியன்று நிகழ்ந்துள்ளது. 

இதுதொடர்பாக பரவலாக பரவி வந்த வீடியோவில், அரசு ஊழியரான பாஸ்கர் ராவ் ஆரஞ்ச் நிற சட்டை அணிந்திருந்திருக்கும் அவர், அலுவலக அறைக்குள் புகுந்து, மேஜையில் அமர்ந்திருந்த பெண்ணின் முடியை பிடித்து இழுக்கிறார். இதில், அந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுகிறார். எனினும், விடாமல் திரும்ப திரும்ப அந்த பெண்ணை சரமாரியாக பாஸ்கர் தாக்குகிறார். இதனை அங்கிருந்த சிலர் தடுக்க முயற்சிக்கின்றனர். தொடர்ந்து, அவர் அங்கிருந்த எதோ ஒரு பொருளை வைத்தும் சரமாரியாக தாக்குகிறார். 

இந்த சம்பவம் குறித்து நெல்லூர் தலைமை காவல் அதிகாரி பாஸ்கர் பூஷண் என்டிடிவியிடம் கூறும்போது, பாஸ்கர் ராவ் மீது பல பரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி அவரை கைது செய்துள்ளோம். அவர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முடிவுகள் வந்த பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஆந்திர அரசு ஆலோசகர் எஸ்.ராஜீவ் கிருஷ்ணா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, நெல்லூர் காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த சம்பவத்தில் நீதி வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இத்தகைய நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோவை பார்த்த தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, நான் இப்போதை இந்த வழக்கை கையில் எடுக்கிறேன். அவர் செய்த செயலுக்கு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.