This Article is From Dec 18, 2018

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து - 6 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரிழப்பு

அதிகாரிகள் NDTV.-க்கு அளித்த பேட்டியில் 15 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக கூறினர்.

நோயாளிகள் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Mumbai:

மும்பையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 6 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 140 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை காம்நகரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 10 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டு அருகில் உள்ள கூப்பர், ஹோலி ஸ்பிரிட், பி. தாக்கரே ட்ராமா, ஹிராநந்தினி, சித்தார்த் உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீயணைப்பு படையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் விபத்து நேர்ந்து கொண்டிருக்கும்போதே அங்கிருந்து 140-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து மும்பை மேயர், ''தீ விபத்திற்கான காரணம் குறித்த விவரம் தெரியவரவில்லை. சேதம் தொடர்பாக மகாராஷ்டிர தொழில் மேம்பாட்டுத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.

ஆனால், மகாராஷ்டிர தொழில் மேம்பாட்டு கழகத்தின் துணைத் தலைவர் NDTV-க்கு அளித்த பேட்டியில் 15 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் தீ விபத்து பாதுகாப்பில் குறைபாடு இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

.