This Article is From Aug 02, 2018

டோக்லாம் விவகாரம்… சுஷ்மாவை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!

டோக்லாம் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று அது குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

டோக்லாம் விவகாரம்… சுஷ்மாவை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!
New Delhi:

டோக்லாம் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று அது குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். அதற்கு தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்வினை ஆற்றியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், டோக்லாம் பகுதியில் தனது வேலையை சீனா மீண்டும் ஆரம்பித்துள்ளது என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை அமெரிக்க அரசு அதிகாரி அலைஸ் ஜி வெல்ஸ் தெரிவித்தார். இவர்தான் அமெரிக்காவுக்கான தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை உதவி செயலாளர் ஆவார். 

அவர் மேலும், ‘சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து பூட்டானுக்கோ இந்தியாவுக்கோ கொஞ்சமும் தெரிந்திருக்கவில்லை. இந்தியா, தனது வட எல்லையை தொடர்ந்து தீர்க்கமாக பாதுகாத்து வருகின்றது. இந்நிலையில், இந்த விஷயம் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்’ என்று கூறினார். 

இது குறித்து நேற்று பேசிய சுஷ்மா, ‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்னையாக இருந்த டோக்லாம் விவகாரம் தூதரக உறவுகள் மூலம் சுமூகமாக தீர்க்கப்பட்டது. இதில் நம் நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிலமை சீராக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி டோக்லாம் பிரச்னை முழுவதுமாக சரிசெய்யப்பட்டது’ என்று பேசினார்.

இதற்கு ராகுல் காந்தி, அமெரிக்க அதிகாரி பேசியது குறித்து வெளியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘சுஷ்மா சுவராஜ் போன்ற ஒரு பெண், எப்படி சீன ஆதிக்கத்துக்கு பணிந்துள்ளார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி அவர் செய்ததன் மூலம் எல்லையில் நமக்காக போராடும் வீரமிக்க ராணுவ வீரர்கள் பழிவாங்கப்பட்டுவிட்டனர் என்று அர்த்தம்’ என்று காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

மீண்டும் டோக்லாம் விவகாரம் தேசிய அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பும் என்றே கூறப்படுகிறது.


 

.