This Article is From Dec 27, 2018

‘உ.பி-யில் பதிலடி கிடைக்கும்..!’- ராகுல் காந்தியை எச்சரித்த அகிலேஷ்

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டு சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பாஜக-காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்

ஹைலைட்ஸ்

  • ம.பி-யில் சமாஜ்வாடி சார்பில் ஒருவர் எம்.எல்.ஏ-வாக தேர்வாகியுள்ளார்
  • 'உ.பி-க்கு பாதை தெளிவாகியுள்ளது', அகிலேஷ் கருத்து
  • காங். இல்லாமல் உ.பியில் சமாஜ்வாடி,பகுஜன் சமாஜ் கூட்டணி அமைக்க வாய்ப்பு
New Delhi:

மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் அந்தக் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் ஆட்சியமைப்பதில் எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. 

இன்று மத்திய பிரதேசத்தில் பதவியேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டது அம்மாநில காங்கிரஸ் அரசு. அதில் சமாஜ்வாடி கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ-வின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனால் கொதிப்படைந்த அகிலேஷ், ‘நீங்கள் இன்று எடுத்த முடிவு, உத்தர பிரதேசத்தில் எதிரொலிக்கும்' என்று காங்கிரஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

gkq87tn8

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘காங்கிரஸுக்கு நன்றி. எங்களின் எம்.எல்.ஏ-வை அவர்கள் அமைச்சர் ஆக்கவில்லை. இப்படியொரு செயலை காங்கிரஸ் செய்திருப்பதன் மூலம் உத்தர பிரதேசத்தில் பாதை தெளிவாகியுள்ளது' என்று சூசகமாக கூட்டணி முறிவு குறித்து பேசியுள்ளார். 

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டு சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் இரு கட்சித் தலைவர்களும் காங்கிரஸை நீக்கிவிட்டு கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்தான், அகிலேஷ் இப்படியொரு கருத்தை பதிவு செய்துள்ளார். 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பாஜக-காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் பல்வேறு தேசிய அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவரின் இந்த முயற்சிக்கும் அகிலேஷ் யாதவ், வரவேற்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.