This Article is From Jul 02, 2019

கோவையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து!

கோவையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கோவையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து!
Coimbatore, Tamil Nadu:

கோவையில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அந்த விமானத்திலிருந்து பெட்ரோல் டேங்க் விழுந்தது. இந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறி தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோவையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள சூளூர் விமான தளத்தில் விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விமானப்படை அதிகாரிகள் கூறும்போது, பெட்ரோல் டேங்க் விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. விபத்து சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

இந்த பெட்ரோல் டேங்க் 1200 லீட்டர் கொள்ளவு கொண்டது. இந்தப் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு நடத்திவருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, விமானத்தின் பாகங்கள் விவசாய நிலங்களில் சிதறிக் கிடப்பதாகவும், அப்பகுதியில் 3 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் நிலைமையை சுதாரித்துக்கொண்ட விமானி, சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ள சூலூர் விமானப்படைக்கே திரும்பிச் சென்று பயிற்சி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

இதனால், விமானத்தில் பயணித்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விமானத்தின் பாகம் கழன்று விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, அண்மையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானத்தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் மீது பறவை மோதியது. இதில், விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்தது.

இதையடுத்து, மீதமுள்ள ஒரு எஞ்சினின் மூலம் விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். எனினும், அவசர நடவடிக்கையாக, விமானத்தின் பாரத்தை குறைக்கும் வகையில், விமானத்தின் எரிபொருள் தொட்டி மற்றும் சிறிய அளவிலான பயிற்சி குண்டுகளையும் கீழே வீச வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது.

With inputs from PTI

.