This Article is From Nov 29, 2019

உள்ளாட்சி தேர்தலை மறைமுகமாக நிறுத்த முயற்சிக்கிறது அதிமுக: மு.க.ஸ்டாலின்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு வரையறை இதுவரை செய்யப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை.

உள்ளாட்சி தேர்தலை மறைமுகமாக நிறுத்த முயற்சிக்கிறது அதிமுக: மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசு தான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திட்டமிட்டுள்ளது

திமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாகவும், அதிமுக அரசுதான் மறைமுகமாக இந்த தேர்தலை நிறுத்த திட்டமிட்டு உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது, 

உள்ளாட்சி மன்ற தேர்தலை நிறுத்த திமுக சதி செய்வதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக. தயாராக உள்ளது. அதிமுக அரசு தான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திட்டமிட்டுள்ளது. எனவே தான் உள்ளாட்சி தேர்தலுக்கு முறையான எந்த தயாரிப்புகளையும் செய்யவில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு வரையறை இதுவரை செய்யப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படவில்லை. பட்டியல் இனத்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கான வார்டுகள் வரையறை செய்யப்படவில்லை.

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று முன்பு கூறினார்கள். இப்போது மறைமுக தேர்தல் என்று அவசர சட்டம் பிறப்பித்து இருக்கிறார்கள். இப்படி உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த வகையிலும் அரசு சட்டப்படி தயாராகவில்லை. 

யாராவது நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்வார்கள். அதை காரணமாக வைத்து உள்ளாட்சி தேர்தலை நிறுத்திவிடலாம் என்று இந்த அரசு சதிசெய்து வருகிறது. ஆனால் திமுக மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி செய்கிறது என்று அவர் கூறினார்.

.