ஒரே இரவில் பணத்தைச் செலுத்த வேண்டுமா? வோடாஃபோன் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியது தான்!

வோடாஃபோன் நிறுவனம் அரசுக்கு ரூ.7000 கோடி செலுத்த வேண்டியது உள்ளது. இதுவே வட்டியுடனும், அபராதத்துடனும், அபராதம் மீதான வட்டியுடனும் ரூ.23,000 முதல் 25,000 கோடி வரை போகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலுவைத் தொகையை ஒரே இரவில் அந்நிறுவனங்கள் செலுத்துவதற்கு வழியே இல்லை என்று முகுல் ரோஹத்கி கூறியுள்ளார்.(File)

New Delhi:

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் கடந்த 10 வருடங்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், அந்நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஒரே இரவில் அரசுக்குச் செலுத்த வேண்டுமென்றால், வோடாஃபோன் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியது இருக்கும் என அந்நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் முகுல் ரோஹத்கி என்டி.டிவியிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, இதனால், 10,000 பேருக்கு வேலையிழப்பு ஏற்படும், 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். 

வோடாஃபோன் நிறுவனம் அரசுக்கு ரூ.7000 கோடி செலுத்த வேண்டியது உள்ளது. இதுவே வட்டியுடனும், அபராதத்துடனும், அபராதம் மீதான வட்டியுடனும் ரூ.23,000 முதல் 25,000 கோடி வரை போகும் என்று அவர் கூறியுள்ளார். வோடா ஃபோன் நிறுவனம் ரூ.2150 கோடி ஏற்கனவே செலுத்திவிட்டது. இதற்கு மேலும், அரசு வங்கி உத்தரவாதம் கேட்டு, நிறுவனத்தைத் தள்ளாட விடக்கூடாது என்றும் அப்படி இல்லை என்றால், வோடாஃபோன் நிறுவனத்தை நாளையே இழுத்து மூட வேண்டியது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலுவைத் தொகையை ஒரே இரவில் அந்நிறுவனங்கள் செலுத்துவதற்கு வழியே இல்லை என்று அந்நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையிடம் கூறி வருகின்றன. அரசும் இந்த சமயத்தில் விழித்தெழ வேண்டும் என்றும் இல்லையென்றால், மிகப்பெரிய அழுத்தத்தைச் சந்திக்க நேரிடும். இதையடுத்து, இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் இரண்டு ஆபரேட்டர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று முகுல் ரோஹத்கி கூறியுள்ளார். 

முன்னதாக, நீதிமன்ற உத்தரவை மதிக்காத நிறுவனங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. 

இதைத்தொடர்ந்து, மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடியை பாரதி ஏர்டெல் நிறுவனம் நேற்றைய தினம் வழங்கியது. வோடாஃபோன் ஐடியா மற்றும் டாடா நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் நிலுவைத் தொகையின் ஒரு பகுதியைச் செலுத்திவிட்டன. தொலைத்தொடர்புத் துறைக்கு மொத்தம் ரூ.35,586 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய ஏர்டெல் நிறுவனம், அதில் ரூ.10 ஆயிரம் கோடியைச் செலுத்தியதைத் தொடர்ந்து, இன்னும் 25,586 கோடி செலுத்த வேண்டியுள்ளது. 

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் ரூ.53,000 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும். இதில், 2,500 கோடி செலுத்திய நிலையில் மீதம் ரூ.50,500 செலுத்த வேண்டும். டாடா நிறுவனம் மொத்தம் ரூ.13,800 கோடி செலுத்த வேண்டும். இந்த தொகைகளைச் செலுத்த மார்ச் 17ம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தொலைத்தொடர்புத்துறையானது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து நான் தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து கேட்டு தெரிந்துகொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். 

Listen to the latest songs, only on JioSaavn.com