This Article is From Aug 01, 2018

அசாம் விவகாரத்தில் மம்தாவின் சர்ச்சை கருத்து; போலீஸில் வழக்கு!

அசாம் மாநிலத்தில் குடியுரிமை இறுதி வரைவு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது

ஹைலைட்ஸ்

  • பாஜக பல லட்சம் மக்களை நாடற்றவர்களாக ஆக்கப் பார்க்கிறது, மம்தா
  • மம்தா தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கப் பார்க்கிறார், அமித்ஷா
  • அசாமில் மம்தாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது
New Delhi:

அசாம் மாநிலத்தில் குடியுரிமை இறுதி வரைவு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மம்தா மீது அசாமில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. அவர்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படுவர் என்று தெரிகிறது. அசாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து கருத்து தெரிவித் மம்தா பானர்ஜி, ’40 லட்சம் மக்கள் எங்கே போவார்கள். பா.ஜ.க மக்களை பிரிக்கும் சதியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை மக்கள் போரை உருவாக்கி, ரத்த களரியாக்க போகிறது’ என எச்சரித்திருந்தார். இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது.

அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, ‘அரசியல் கட்சிகள் கூறும் கருத்துக்களை கேட்டு அதிர்ச்சையடைந்தேன். இந்தியர்களின் உரிமை குறித்து எதிர்கட்சிகளுக்கு அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. போர் சூழல் உருவாகும் என்று கூறி மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க நினைக்கின்றார் மம்தா. வாக்கு வங்கியை பெற இப்படி பேசுகிறார். இந்திய மக்களின் உரிமையை காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

அதற்கு பதிலடி கொடுத்த மம்தா, ‘யார் இந்தியர்கள் என அவர்கள் முடிவு செய்ய அவர்கள் யார். பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இந்தியர்கள். மற்றவர்கள் இந்தியர்கள் அல்ல. அரசியல் என்பது சகிப்புத்தன்மை. அரசியல் என்பது ஜனநாயகம்’ என்றார்.

இந்நிலையில் மம்தா மீது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பாஜக-வினர், அம்மாநிலத்தின் டிபர்கர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அசாம் மாநில பிரச்னை இந்திய அளவில் பிரளயம் கிளப்பி வருகிறது.

.