This Article is From Jul 26, 2018

3 சிறுமிகளின் பட்டினிச் சாவுக்கு காரணம் என்ன? திடுக்கிடும் தகவல்

டெல்லியில், பல நாட்களாக சாப்பிடாததால், மூன்று சிறுமிகள் பட்டினியால் இறந்த சம்பவம் அரசு மற்றும் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஹைலைட்ஸ்

  • 3 சிறுமிகளும் பசியால் பலியானது பரிசோதனையில் கண்டுபிடிப்பு
  • தந்தை வேலை தேடி வெளியே சென்ற நிலையில் சிறுமிகள் உணவின்றி பலி
  • ரேஷன் திட்டத்தில் குளறுபடி இருப்பதாக ஆம் ஆத்மி மீது பா.ஜ.க சாடல்
New Delhi:

டெல்லியில், பல நாட்களாக சாப்பிடாததால், மூன்று சிறுமிகள் பட்டினியால் இறந்த சம்பவம் அரசு மற்றும் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. எட்டு, நான்கு மற்றும் இரண்டு வயதான சகோதரிகளான அந்த சிறுமிகள், கடந்த சில நாட்களாக பசியில் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கிழக்கு டெல்லியின் மாண்டேவாலியைச் சேர்ந்த அந்த மூன்று சிறுமிகளையும், அவர்களது தாய், குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின், காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்ததில், அந்த சிறுமிகள் சில நாட்களாக உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. உடல் கூறாய்வு செய்ததில், அவர்கள் வயிற்றில் உணவு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இது பற்றி சிறுமிகளின் தாயிடம் போலீஸார் விசாரித்தனர். ஆனால், அவர் மன நிலை சரியில்லாத காரணத்தால், எதையும் தெளிவாக கூறவில்லை. சிறுமிகளின் தந்தை, வேலை தேடுவதற்காக வெளியூர் சென்றிருப்பதாகவும், வர இரண்டு நாட்களாகும் என்றும் அக்கம் பக்கத்தினர் கூற தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த குடும்பம், சில நாட்களுக்கு முன்னர் தான் டெல்லிக்கு வந்துள்ளனர். சிறுமிகளின் தந்தை ரிக்‌ஷா ஓட்டி வந்ததாகவும், அது திருடு போனதால், பணியின்றி தவித்து வந்துள்ளார். பின், அவரது நண்பர் ஒருவரின் உதவியால், மாண்டேவாலிக்கு அவர்கள் குடி பெயர்ந்துள்ளனர்.

மேலும், மாண்டேவாலியில் சிறுமிகளின் வீட்டில் சோதனை நடத்தியதில், வாந்தி மற்றும் வயிற்று போக்குக்கான மருந்துகள் இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த மாண்டேவாலி, டெல்லி துணை முதல்வர் சிஸோடியாவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமிகளின் மரணம், அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது. டெல்லி பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி, “ ரேஷன் திட்டத்தை மிகச் சிறப்பாக செய்து வருவதாக கூறிக் கொள்ளும் ஆம் ஆத்மி அரசு ஆட்சி நடத்தும், டெல்லியில் இந்த சோகத்துக்குறிய சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும், துணை முதல்வர் சிஸோடியா தொகுதியில் நடந்திருக்கிறது” என்று ஆம் ஆத்மியை தாக்கி பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மியின் சவுரப் பரத்வாஜ் “ டெல்லி அரசின், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு செல்லும் திட்டத்துக்கு, மத்திய பா.ஜ.க அரசு முட்டுக் கட்டை போட்டு வருகிறது" என்றார். காங்கிரஸ் தன் பங்குக்கு “ டெல்லியில் 9 லட்சம் குடும்பங்கள் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பத்தும், அவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை. மேலும், தாமதப்படுத்திக் கொண்டே இருந்தால், இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும் “ என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜெய் மக்கான், ஆம் ஆத்மி அரசை தாக்கி பேசியுள்ளார்.

.