This Article is From Feb 12, 2020

வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜர்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஜய், அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் ஏஜிஎஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.

வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜர்!

நடிகர் விஜயின் ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம்

நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த வாரம் நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் விஜயின் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த போது, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

கடந்த தீபாவளியன்று வெளியான விஜய் நடித்த ‘பிகில்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது. இதில் தயாரிப்பாளர் தரப்பான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு கிடைத்த வருமானம், நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையின் ஒரு பகுதியாக விஜயின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடி கைப்பற்றப்பட்டது. சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் ரூ.300 கோடி வரையில் வருமானம் மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, விஜய் வீட்டில் 23 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றது. அங்கிருந்து பணம், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்து வருமான வரித்துறை எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தது. இதையடுத்து, வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவு பெற்றதையடுத்து நடிகர் விஜய் மீண்டும் தனது மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தொடர்ந்து, நெய்வேலியில் நடந்த படப்படிப்பும் நிறைவு பெற்றது. 

இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஜய், அன்புச்செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் ஏஜிஎஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், நடிகர் விஜயின் ஆடிட்டர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் ஆடிட்டர் இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

.