This Article is From Aug 31, 2018

சாதி, மத அமைப்பினருக்கு நோ என்ட்ரி..! - ரஜினி மக்கள் மன்றம் கண்டிஷன்

அமைப்பின் படிநிலை குறித்தும், எப்படி பல்வேறு துணை அமைப்புகளில் சேர்வது என்பது குறித்தும் விதிமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதி, மத அமைப்பினருக்கு நோ என்ட்ரி..! - ரஜினி மக்கள் மன்றம் கண்டிஷன்
Chennai:

‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’ என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்த ரஜினி, தனது ‘ரஜினி மக்கள் மன்றம்’ அமைப்பின் சட்ட விதிகளை வெளியிட்டுள்ளார்.

36 பக்கங்கள் கொண்ட மன்றத்தின் விதிமுறைகள் அறிவிப்பில், ‘ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும், சமூக சீர்கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது, தவறான பழக்கங்களுக்கு அடிமையாவதிலிருந்து விலகி இருக்க வேண்டும்’ உள்ளிட்ட விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமைப்பின் படிநிலை குறித்தும், எப்படி பல்வேறு துணை அமைப்புகளில் சேர்வது என்பது குறித்தும் விதிமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ஆட்கள் சேர்ப்பது மற்றும் பல்வேறு பதவிகளுக்கு நபர்களை நியமிப்பது உள்ளிட்ட வேலைகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக தெரிவித்த ரஜினி, ‘சாதி, மதமற்ற ஆன்மிக அரசியலைத்தான் முன்னெடுப்பேன்’ என்று கருத்து தெரிவித்தார்.

அவரின், ‘ஆன்மிக அரசியல்’ கருத்துக்கு பலத்த விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக, ரஜினியின் இந்த கொள்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அவரை, ‘ஆர்.எஸ்.எஸ்-ன் இன்னொரு பரிமாணம்’ என்றும் ஒரு சாரார் விமர்சித்தனர்.

இதையடுத்து ரஜினி, ‘ஆன்மிக அரசியல் என்று சொன்னதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் மதச்சார்பின்மைதான். முறையான ஆட்சியை வழங்குவது தான் குறிக்கோள்’ என்று தெளிவுபடுத்தினார். இருந்தும் அவருக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை.

தற்போது, ‘சாதி, மத சார்புடைய அமைப்பில் இருப்பவர்களுக்கு மன்றத்தல் அனுமதி கிடையாது’ என்று மன்ற விதிமுறைகளில் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், ‘அது ஒரு சட்டம் இல்லை. அதை சரிவர அமல்படுத்த முடியாது. விதிமுறை என்று சொல்லி இருப்பது ஒரு அரசியல் கருத்துதான்’ என்று கூறியுள்ளார்.

.