This Article is From Sep 30, 2019

Aaditya Thackeray: மகாராஷ்டிரா தேர்தலில் முதல்முறையாக ஆதித்யா தாக்கரேவை களமிறக்க திட்டம்!

Aaditya Thackeray: தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் நபராக ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரா தேர்தலில் முதல்முறையாக ஆதித்யா தாக்கரேவை களமிறக்க திட்டம்

Mumbai:

மும்பையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்தயா தாக்கரேவை தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக சிவசேனா தகவல் தெரிவித்துள்ளது. 

இதன்மூலம், தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் நபராக ஆதித்யா தாக்கரே தேர்தலில் போட்டியிட உள்ளார். இதுதொடர்பாக சிவசேனா கட்சி தலைவருக்கு நெருக்கமான ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "வொர்லி" தொகுதியின் வேட்பாளராக ஆதித்யா தாக்கரேவின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த தொகுதியில் உள்ள எம்எல்ஏ சுனில் ஷிண்டே அவருக்கு இடத்தை விட்டுத்தருகிறார் என்று கூறினார். 

"வொர்லி" தொகுதி சிவசேனாவுக்கு பாதுகாப்பான தொகுதியாகும். அதனால், தான் அங்கு ஆதித்தயாவை களமிறக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. மேலும், அந்த தொகுதியில் இருந்த, முன்னாள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சச்சின் ஆகிரும் சிவசேனாவில் இணைந்துவிட்டதால், ஆதித்யா தாக்கரேவின் வெற்றி எளிதாக அமைந்துவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

உத்தவ் தாக்கரேவின் உறவினரும், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (MNS) தலைவருமான ராஜ் தாக்கரே, கடந்த 2014 மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்திருந்தார். இருப்பினும், பின்னர் அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

அடுத்த மாதம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ராஜ் தாக்கரேவையே முதல்வர் முகமாக சிவசேனா முன்னிறுத்தி வருகிறது.

முன்னதாக சனிக்கிழமையன்று, மகாராஷ்டிர முதலமைச்சராக 'சிவ சேனை' (கட்சி ஊழியர்) ஒருவரை நிறுவுமாறு மறைந்த தனது தந்தை பால் தாக்கரேவுக்கு தான் அளித்த "வாக்குறுதியை" உத்தவ் தாக்கரே நினைவு கூர்ந்தார்.

அதாவது, தற்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் மாநிலத்திற்கு தலைமை தாங்குவார் என்று பாஜகவின் மூத்த தலைவர்கள் அறிவித்த நிலையில், உத்தவ் தாக்கரேவின் அறிவிப்பு வந்தது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக சிவசேனா கட்சி அறிவித்தது. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, தொகுதி பங்கீடு குறித்து கிடைத்த தகவலின்படி, மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 144 இடங்களிலும், சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிடும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற இடங்கள் சிறிய கட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. 

மேலும், 126 இடங்களைத் தவிர்த்து துணை முதல்வர் பொறுப்பும் சிவசேனா கட்சிக்கு வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக உயர்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக பாதிக்கு பாதி தொகுதிகளில் சிவசேனா போட்டியிடும் என தகவல்கள் பரவலாக வெளியானது. இறுதியாக 126 தொகுதிகளில் போட்டியிடும் முடிவுக்கு அக்கட்சி வந்துள்ளது. கடந்த 2014 சட்டமன்ற தேர்தலின்போது இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்னர் பாஜக அரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்து வருகிறது. 

.