This Article is From Nov 15, 2018

விமர்சனத்தால் தடைபட்டது டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி!

பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் பாடல் கச்சேரி ஒன்று வலதுசாரிகளின் தொடர் விமர்சனங்களால் தடைபட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

டெல்லியில் இந்த இசைக் கச்சேரி நடைபெறவிருந்தது

New Delhi:

பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் பாடல் கச்சேரி ஒன்று வலதுசாரிகளின் தொடர் விமர்சனங்களால் தடைபட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருகிற நவம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வழங்கும் பாட்டுக் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மகசேசே விருது வென்ற பிரபல கர்நாடக இசைப் பாடகரான டி.எம்.கிருஷ்ணா பாடுவதாக இருந்தது. ஆனால், அழைப்பிதழ் வெளியிட்ட நான்கே நாட்களில் இந்தக் கச்சேரி நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணா மட்டுமல்லாது சோனல் மான்சிங், பிரியதர்ஷினி கோவிந்த், ஷாகித் பர்வேஷ் கான் ஆகிய பாடகர்களும் பாடல் கச்சேரி நிகழ்த்துவதாகவே இருந்தது.

சமீப காலமாக பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பல விமர்சனங்களை வலதுசாரிகள் குழு சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகக் கூறப்படுகிறது. பாடகர் டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசையில் இயேசு கிறிஸ்து குறித்துப் பாடியதால் இந்தச் சர்ச்சை தொடங்கி உள்ளது. இதையடுத்து மாதம் ஒரு பாடல் வீதம் கர்நாடக இசையிலேயே இயேசு குறித்தும் அல்லா குறித்தும் பாடல் வெளியிடப் போவதாக டி.எம்.கிருஷ்ணா அறிவித்தது போலான ஒரு ஆடியோ வெளியானது. இது குறித்து அவர் ட்வீட்டும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தான் தற்போது, கிருஷ்ணாவுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பாடகர் டி.எம்.கிருஷ்ணா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைக் கல்வியை நிறைவு செய்துள்ளார். ஆறு வயது முதலே பாடல்கள் பாடக் கற்று பாடி வருகிறார். இவர் சங்கீதம் குறித்து மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.