This Article is From Aug 03, 2018

பெண்களுக்கு எதிரான சதிச்செயலில் ஈடுபடும் ஜப்பான் மருத்துவப் பல்கலைக்கழகம்

ஜப்பானின் டோக்யோ மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து நுழைவுத் தேர்வு எழுதும் மாணவிகளின் மதிப்பெண்கள் திட்டமிட்டு குறைக்கப்படுவதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

பெண்களுக்கு எதிரான சதிச்செயலில் ஈடுபடும் ஜப்பான் மருத்துவப் பல்கலைக்கழகம்

2018இல் விண்ணப்பித்த 1019 மாணவிகளில் 30 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, டோக்யோ மருத்துவப் பல்கலைக்கழகமானது மருத்துவப் படிப்பு படிக்க விண்ணப்பிக்கும் பெண்களின் மதிப்பெண்களைத் திட்டமிட்டுக் குறைத்து அவர்களை ஒதுக்கி வந்துள்ளது என்று அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஜப்பானின் நாட்டின் முதன்மையான மருத்துவப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான தனியார் கல்வி நிறுவனம் ஆகும். இப்பல்கலை தனது வகுப்புகளில் மாணவிகளின் எண்ணிக்கை 30 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது எனத் திட்டமிட்டு ஏறத்தாழ கடந்த பத்தாண்டுகளாக சதிச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளது. இதன்படி பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பிப்போரில், மாணவிகள் பெறும் மதிப்பெண்களை மட்டும் 10 – 20% வரை குறைத்துப் போட்டு முடிவுகளை அறிவித்து வந்துள்ளனர் என்று யோமியுரி ஷிம்புன் செய்தி வெளியிட்டுள்ளது.

இலஞ்சம் பெற்றுக்கொண்டு, கல்வி அமைச்சக அதிகாரி ஒருவரின் மகனுக்கு மதிப்பெண்களைக் கூட்டிப் போட்டதற்காக, பல்கலைக்கழகத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் மசாஹிகோ உசுய், மாமொரு சுசுகி ஆகியோர் அண்மையில் நடைபெற்ற விசாரணையில் சிக்கி ராஜினாமா செய்தனர். இதனிடையேதான் பெண் மாணவர்களின் மதிப்பெண்ணை குறைத்து வரும் சதிச்செயலும் அம்பலமாகியுள்ளது.

2018இல் விண்ணப்பித்த 1019 மாணவிகளில் 30 பேர் மட்டுமே இறுதியாகத் தேர்வாகியுள்ளனர். இதனால் கூடுதலாக 9% ஆண் மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

இதுகுறித்துக் கூறிய பெண் மருத்துவர்களுக்கான ஜப்பான் பேரவையின் செயற்குழு உறுப்பினர் க்யொகொ தானெபெ, “பிற பல்கலைக்கழகங்களும் இதே போன்று பெண்களை ஓரங்கட்டும் செயலில் ஈடுபட்டு வர வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானின் மொத்த மருத்துவர்களில் நான்கில் ஒரு பங்கு கூட பெண் மருத்துவர்கள் இல்லை. 34 OECD நாடுகளில் இதுதான் மோசமான விகிதாச்சாரம்” என்றார்.

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழத்தில் உதவிப் பேராசிரியராக பணி புரிந்து வரும் மருத்துவர் யுசுகு சுகாவா கூறுகையில், “ஜப்பானின் தாய்க்குலங்களை நாம் ஆதரிப்பதில்லை என்பது அங்கு சமூக அமைப்பு ரீதியாகவே இருந்து வரும் சிக்கல். ஆனால் அதைத் தீர்க்க முயலாவிட்டாலும் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்” என்று கவலை தெரிவித்தார்.

இவர் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், ‘அமெரிக்காவில் பெண் மருத்துவர்களால் வைத்தியம் பார்க்கப்படும் போது ஏற்படும் இறப்பு விகிதம் ஆண் மருத்துவர்கள் பார்ப்பதை விட மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் நோயாளிகள் முழுமையாக குணமடைகின்றனர்’ எனக் கண்டறிந்துள்ளார்.

“இம்முடிவுகள் அப்படியே ஜப்பானுக்குப் பொருந்தும் என்று நான் கூறவரவில்லை. ஆனால் எது எப்படி ஆனாலும் தகுதியுள்ள பெண்களைத் திட்டமிட்டு ஒதுக்குவது சரியான செயல் அல்ல. ஏற்கனவே மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போய்க்கொண்டிருக்கும் நிலையில் தகுதியுள்ள மாணவர்களைப் படிக்கவிடாமல் தடுப்பது நீண்ட கால நோக்கில் ஜப்பான் நாட்டைப் பாதிக்கும். படித்து முடித்த பெண்கள் மருத்துவத் துறையில் ஈடுபடுவதில்லை என்று கூறப்படுவதால் பெண்களைப் படிக்க விடாமல் தடுப்பதும் நியாயமே இல்லை. இவர்களின் வேலை தகுதியான மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமே” என்றும் அவர் கூறினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.