This Article is From Nov 07, 2018

‘கோலி அணியின் வெற்றி போல் உள்ளது!’- கர்நாடக இடைத் தேர்தல் குறித்து ப.சிதம்பரம்

கர்நாடகாவில் நேற்று 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன

‘கோலி அணியின் வெற்றி போல் உள்ளது!’- கர்நாடக இடைத் தேர்தல் குறித்து ப.சிதம்பரம்

சிவமுகா லோக்சபா தொகுதியில் மட்டும்தான் பாஜக வெற்றியடைந்துள்ளது

கர்நாடகாவில் நேற்று 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இடைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘கூட்டணி பலன் தந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

மொத்தமாக தேர்தல் நடந்த 5 இடங்களில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவமுகா லோக்சபா தொகுதியில் மட்டும்தான் பாஜக வெற்றியடைந்துள்ளது.

பெல்லாரி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் உகரப்பா, பாஜக-வின் சாந்தாவை 2.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2004 ஆம் ஆண்டு முதல் பாஜக வசம் தான் பெல்லாரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாண்டியா லோக்சபா தொகுதியில், மஜத-வின் வேட்பாளர் சிவராமே கவுடா, பாஜக-வின் சித்தராமையாவை 3.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ராமநகரா தொகுதியைப் பொறுத்தவரை, முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி, பாஜக-வின் சந்திரசேகரை 1.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

ஜம்காண்டி தொகுதியில், காங்கிரஸின் ஆனந்த் சித்து நியாமகவுடா, பாஜக-வின் ஸ்ரீகாந்த் குல்கர்னியை 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.

பாஜக-வின் ராகவேந்திரா, மஜத-வின் மது பங்காரப்பாவை சிவமுகா லோக்சபா தொகுதியில் 52,148 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். ராகவேந்திரா, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ஆவார்.

இந்நிலையில் இடைத் தேர்தல் வெற்றி குறித்து ப.சிதம்பரம், ‘கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம். கூட்டணி பலன் தந்துள்ளது' என்று ட்வீட் செய்துள்ளார்.

 

 

.