This Article is From Oct 23, 2018

உத்தரப்பிரதேசத்தில் தாமரை வடிவில் 3 கோடி விளக்குகள் - தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பாஜக

மக்களவை தேர்தல் தொடர்பாக குடியரசு தின விழா அன்று 3 கோடி விளக்குகளை உத்தரப்பிரதேசத்தில் ஒரே நேரத்தில் எரியவிட பாஜக திட்டமிட்டுள்ளது

உத்தரப்பிரதேசத்தில் தாமரை வடிவில்  3 கோடி விளக்குகள் - தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பாஜக

தேர்தல் பிரசாரத்திற்காக இத்தகைய முடிவை பாஜக எடுத்துள்ளது.

Lucknow:

மக்களவை தேர்தலுக்கு தேசிய கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. நாட்டிலேய அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதையொட்டி புதிய பிரசார யுக்திகளை அக்கட்சி வகுத்துள்ளது.

தன்படி, பாஜக அரசால் பயன்பற்ற 3 கோடி குடும்பங்கள் உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட உள்ளன. மத்திய மாநில அரசின் வீட்டு வசதி திட்டங்கள், மின்சார வசதி, சமையல் எரிவாயு, சுகாதாரம், காப்பீடு, கடன் வசதி மூலம் சுய வேலை வாய்ப்பை பெற்றவர்கள் உள்ளிட்டோர் இந்த 3 கோடி குடும்பங்களில் அடங்குவார்கள்.

இவர்களிடம் வீட்டிற்கு ஒன்றாக மொத்தம் 3 கோடி தாமரை வடிவிலான மின் விளக்குகள் வழங்கப்பட உள்ளது. அவர்கள், குடியரசு தினத்தன்று இந்த விளக்குகளை தங்களது வீடுகளில் ஒளிர விட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு கிடைக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைமை நம்புகிறது. தேர்தல் பிரசாரம் தொடர்பான கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் உத்தரப்பிரதேச மாநில தலைவர் மகேந்திர நாத் பாண்டே, பொதுச்செயலாளர்கள் சுனில் பன்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பல்வேறு பிரசார வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று வரும் நவம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை கட்சியின் மூத்த தலைவர்கள் பூத்களுக்கு சென்று பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து பேசுகின்றனர். இதன்பின்னர் 17-ம் தேதி பைக் பேரணி ஒவ்வொரு மக்களவை தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக சட்டசபை தொகுதிகள் அளவில் வரும் டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை பைக் பிரசார பேரணி நடைபெறவுள்ளது.

.