This Article is From Aug 08, 2018

ஜெயலலிதாவுக்கு 3500 அடியில் நினைவிடம், கருணாநிதிக்கு 6 அடி நிலம் இல்லையா?- திமுக

அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து திமுக உயிர்நீதிமன்றத்தின் கதவுகளை நாடியுள்ளது

ஜெயலலிதாவுக்கு 3500 அடியில் நினைவிடம், கருணாநிதிக்கு 6 அடி நிலம் இல்லையா?- திமுக
Chennai:

திமுக தலைவர் மு.கருணாநிதியை அவரின் மிக நெருக்கமான தலைவரான அண்ணாவின் நினைவிடத்தில் புதைக்க திமுக சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை எடப்பாடி அரசு நிராகரித்திருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய தலைவர்களான ஓமர் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவரும் இந்நேரத்தில் தமிழக அரசு பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் எச்சூரி இச்செய்கையை துரதிருஷ்டவசமானது என கூறியுள்ளார்.

அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து திமுக உயிர்நீதிமன்றத்தின் கதவுகளை நாடியுள்ளது. அனுமதி மறுப்பிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே முக்கிய காரணமென கூறும் திமுக, இதை கீழ்மையின் உச்சம் என விமர்சித்திருக்கிறது.

l7dcav9g

வழக்கின் தீர்ப்பு இன்று காலை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், திமுகவின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் A. சரவணன் செய்தியாளர்களிடம், "நாங்கள் நினைவிடம் அமைக்க அனுமதி கேட்கவில்லை, அவருக்கு அரசியல் குருவாக வழிகாட்டியாக இருந்த அண்ணாவின் அருகே புதைக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் கோரிக்கை" என தெரிவித்தார்.

வழக்கு இன்று காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து 8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணா சமாதி கடலிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் இல்லாததால் கடற்கரைகென இருக்கும் விதிகள் அதற்கு பொருந்தாது என்றும், மேலும் ஜெயலலிதாவை எம்ஜிஆர் சமாதியில் புதைத்த போது எந்த வித சட்ட சிக்கல்களும் இல்லாமல் போனது எப்படியென்றும் கேள்வி எழுப்பினார் சரவணன்.

"ஜெயலலிதா சமாதியை சுற்றி 3500 அடிக்கு 50 கோடி செலவில் நினைவிடம் கட்டுவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருக்கும் தமிழக அரசு, கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுக்கிறது" என்பதை நீதிமன்றத்தில் பதிவு செய்திருப்பதாக கூறிய சரவணன் திமுக தொண்டர்களின் உணர்வுகளை அதிமுக அரசு சீண்டிப்பார்ப்பதாக கூறினார்.

தீர்ப்பு எந்நேரமும் வரலாம் எனும் நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியை சிலர் தூண்டி விட நினைக்கும் நிலையில், கட்சித்தொண்டர்களை அமைதி காக்கும் படியும் கட்சியின் ராணுவ ஒழுங்கை நிரூபித்து பொது அமைதியை காக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

.