This Article is From Jun 17, 2020

லடாக் எல்லையில் சீனாவுடன் நடந்த சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு!!

ஜீரோ டிகிரி மற்றும் அதற்கு குறைவான வெப்பநிலை கொண்ட பகுதியில் நடைபெற்ற இந்தத சண்டையின்போது துப்பாக்கிகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என்றும் கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதால் லடாக் எல்லையில் பதற்றம் காணப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவத்தினர் கடும் மோதல்
  • தமிழக வீரர் பழனி உள்பட இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம்
  • சீனா தரப்பில் உயிரிழப்பு - படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 43 என தகவல்
New Delhi:

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழ்ந்துள்ளதா ஏ.என்.ஐ.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு  தொடங்கிய மோதலில் இந்தியா - சீனா என இரு நாட்டு படைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.  சீனா தரப்பில் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும் ராணுவ கர்னல்  சந்தோஷ் பாபபு, ஹவில்தாரான தமிழகத்தை சேர்ந்த பழனி மற்றும் சிப்பாய் ஓஜா ஆகிய 3 பேர் வீர மரணம் அடைந்திருப்பது மட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜீரோ டிகிரி மற்றும் அதற்கு குறைவான வெப்பநிலை கொண்ட பகுதியில் நடைபெற்ற இந்தத சண்டையின்போது துப்பாக்கிகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என்றும் கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ராணுவம், எல்லைகளை பாதுகாப்பதில் உறுதி யோடு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது. 

இருதரப்பு மோதலை தொடர்ந்து தற்போது இரு நாட்டு படைகளும் பரஸ்பரம் விலகிச் சென்று விட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் இந்த அத்து மீறலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் நடவடிக்கை எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ள மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, இந்தியா  தனது செயல்பாடுகளை தனது  எல்லைக்குள் மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இதேபோன்ற நடவடிக்கையை சீனாவிடம் இருந்தும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். 

லடாக் எல்லையில் சீனா ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்ததை தொடர்ந்து  ராணுவ உயர் அதிகாரிகள் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் முடிவில் படைகள் திரும்பப் பெறப்படும் என சீனா உறுதி அளித்தது. அதைத் தொடர்ந்து படைகள் திரும்பிச் செல்லும் நேரத்தில் இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கற்களை வீசி சில மணி நேரத்திற்கு சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய தரப்பில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி வீர மரணம் அடைந்துள்ளார்.  அவரது மரணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சத்தை இழப்பீடாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தில் தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என உறுதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எல்லையில் நடந்திருக்கும் இந்த அசம்பாவிதம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்  ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். 

3,488 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இந்தியா - சீனா இடையிலான நில எல்லை அமைந்திருக்கிறது. இங்கு முறையாக வேலி அமைக்கப்படாததால் இரு நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. 

.