This Article is From Dec 24, 2018

சபரிமலை அருகே போராட்டக்காரர்களால் 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - திணறுகிறது போலீஸ்

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் கேரள போலீசார் திணறி வருகின்றனர். கூடுதல் படைகளை கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை அருகே போராட்டக்காரர்களால் 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - திணறுகிறது போலீஸ்

சபரி மலையில் பெண்கள் நுழைவதை தடுக்க பம்பையில் போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தங்களை தாக்கினாலும் திரும்பி போகமாட்டோம் என்கின்றனர் பெண்கள்
  • நேற்று 11 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்
  • சுமார் 40 பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
New Delhi:

சபரிமலைக்குள் பெண்கள் நுழைய முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், அவர்களை தடுப்பதற்காக பம்பையில் போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். 2 பெண்களை தடுத்து நிறுத்தி அவர்கள் திருப்பி அனுப்பியதால் அங்கு பதற்றம் காணப்படுகிறது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீசார் அந்த 2 பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு போலீசார் இல்லை என்பதால் கூடுதல் படைகளை கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பம்பையின் சில பகுதிகளில் போராட்டக்காரர்களை போலீசார் சூழ்ந்துள்ளனர்.

தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களில் ஒருவரான பிந்து என்பவர் கூறுகையில், ''எங்களை தாக்கினாலும் நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம்'' என்று தெரிவித்தார். பிந்து கோழிக்கோட்டை சேர்ந்தவர். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து கோஷத்தில் ஈடுபட்டதை செய்தி சேனல்கள் வெளியிட்டுள்ளன.

ஞாயிறன்று 11 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியபோது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த பெண்கள், தங்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறி விட்டதாக கூறினர்.
கடந்த 2 நாட்களாக 40 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வரும் 30-ம்தேதி மகர சங்கராந்தியை முன்னிட்டு கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்றைக்கு தரிசனம் செய்ய இந்த பெண்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை முற்பட்டு வருவதாலும், அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதாலும் கேரளாவில் பரபரப்பு காணப்படுகிறது.
 

.