சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதம் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
நேற்று மட்டும் இந்தியில் 40 சதவீத திரையரங்குகளில் 2.0 திரையிடப்பட்டது. இந்தி படங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் 8-வது மிகப்பெரும் ஓப்பனிங் 2.0 திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், முதல் நாளான நேற்றுமட்டும் ரூ.20.25 கோடியை 2.0 திரைப்படம் வசூலித்துள்ளது. இந்த தகவலை வர்த்தக நிபுணர் தரண் ஆர்ஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியில் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் திரைப்படம் ரூ. 50 கோடி அளவுக்கு முதல் நாளில் வசூலித்தது. அதனை 2.0 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.0 திரைப்படம் ரூ. 20.25 கோடி வசூலாகியுள்ளது.
2.0 திரைப்படம் குறித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், வில்லன் கேரக்டரில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இவர்களை தவிர்த்து சுதான்ஷு பாண்டே, ஆதில் ஹுசைன், ஏமி ஜாக்ஸன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
ரூ. 500 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் 2.0 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் படம் வெளியிடப்பட்டது.