This Article is From May 15, 2019

“சி.ஆர்.பி.எப் மட்டும் இருந்திருக்கவில்லை என்றால்…”- வங்க கலவரத்தால் உஷ்ணமான அமித்ஷா!

வங்க மக்கள், திரிணாமூலை தூக்கி எறிய வேண்டும்- அமித்ஷா

மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் 7 கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

New Delhi/ Kolkata:

பாஜக தலைவர் அமித்ஷா, கொல்கத்தாவில் நேற்று சாலை மார்க்க பிரசாரம் மேற்கொண்டார். அவரது பிரசாரத்தின் போது, கலவரம் வெடித்தது. இந்த கலவரங்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டியுள்ளார் அமித்ஷா. 

இது குறித்து அமித்ஷா, “மம்தா, நீங்கள் ஒரே மாநிலத்தில் இருக்கும் 42 தொகுதிகள் மட்டும்தான் போட்டியிடுகிறீர்கள். ஆனால், பாஜக, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் மட்டும் கலவரம் நடக்கிறது என்றால், அதற்கு காரணம் திரிணாமூல் கட்சிதான்” என்று கொதித்தார். 

“திரிணாமூல் இப்படி நடந்து கொண்டிருப்பதை ஒரு விஷயத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறது. அந்த கட்சியின் பதவிக் காலம் இன்னும் சில காலத்துக்குத்தான். இந்த கலவரத்துக்காக ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்ய வேண்டிய அவசியமில்லை. மக்கள், மம்தா தலைமயிலான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள். மே 23 ஆம் தேதியோடு மம்தாவின் கதை முடிவுக்கு வரும்.

சி.ஆர்.பி.எப் வீரர்கள் மட்டும் எனக்கு சரியாக பாதுகாப்பு கொடுத்திருக்கவில்லை என்றால், நான் கண்டிப்பாக காயப்படாமல் தப்பித்திருக்க மாட்டேன்” என்று சம்பவம் குறித்து விளக்கினார் அமித்ஷா.

கொல்கத்தாவின் கல்லூரி தெருவில் நேற்று சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமித்ஷாவின், பாஜக பேரணி நடைபெற இருந்தது. பாஜக ஆதரவாளர்கள், ராமாயண இதிகாசத்தில் வரும் பாத்திரங்கள் உள்ளிட்டவையுடன் பேரணி ஆரம்பித்தது. ஆனால், பாஜக-வினர் மற்றும் திரிணாமூல் தொண்டர்கள் இடையில் பேரணியின் நடுவிலேயே மோதல் வெடித்தது. 

குறிப்பாக, ‘அமித்ஷா கோ அவே' என்று பதாகைகளைப் பார்த்த பின்னர், பாஜக-வினர் அதற்கு ஆர்ப்பரித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக வித்யாசாகர் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களில் பல செயற்பாட்டாளர்கள் அமித்ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி பதாகைகள் எந்தி இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடந்த மோதலில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி சந்திர வித்யாசாகரின் சிலை தகர்க்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு இரு கட்சிகளும், மற்றவர்களை குற்றம் சாட்டுகின்றனர். 

மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் 7 கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. மே 19 ஆம் தேதி நடக்கவுள்ள கடைசி கட்ட தேர்தலில் மாநிலத்தில் உள்ள 9 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்னர் நடந்த 6 கட்ட வாக்குப்பதிவுகளின் போதும் வங்கத்தில் கலவரம் வெடித்தது. குறிப்பாக பாஜக- திரிணாமூல் இடையில்தான் மோதல் இருந்தது. 

இந்த கலவர சம்பவம் குறித்து முடிவாக பேசிய அமித்ஷா, “தேர்தல் ஆணையம், திரிணாமூல் காங்கிரஸுக்கு எதிராகவும் மம்தாவுக்கு எதிராகவும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. பாஜக, இந்த முறை மேற்கு வங்கத்தில் 23 இடங்களை கைப்பற்றும். மம்தாவின் ஆதரவாளர்கள், மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்குப் பெருகி வரும் ஆதரவைப் பார்த்து அச்சப்பட்டுள்ளனர். அதனால்தான் இப்படி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். வங்க மக்கள், திரிணாமூலை தூக்கி எறிய வேண்டும்” என்று பேசினார். 


 

.