This Article is From Oct 01, 2018

‘மோடிக்கு எப்போதும் ஆதரவு இல்லை!’- சரத் பவார் திட்டவட்டம்

பவாரின் கருத்து குறித்து தேசியவாத காங்கிரஸ், ‘சரத் பவார் என்ன சொல்ல வந்தார் என்பது குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

‘மோடிக்கு எப்போதும் ஆதரவு இல்லை!’- சரத் பவார் திட்டவட்டம்

நான் அவருக்கு எப்போதும் ஆதரவாக நிலைப்பாடு எடுக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார் பவார்

New Delhi:

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ‘நரேந்திர மோடிக்கு ஆதரவாக நான் எப்போதும் நிலைப்பாடு எடுக்க மாட்டேன்’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ரஃபேல் விவகாரம் பூதாகரம் எடுத்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சரத் பவார், ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி மீது மக்கள் சந்தேகம் கொள்ளவில்லை’ என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து தேசியவாத காங்கிரஸின், மூத்த நிர்வாகிகள் சிலர் பவாரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியிலிருந்து விலகினர். மேலும் கட்சிக்குள்ளும் பவார் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால் இன்று அந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் நோக்கில், ‘சிலர், நான் மோடிக்கு ஆதரவாக கருத்து கூறினேன் என்று கூறி என்னை விமர்சித்தனர். நான் அவருக்கு எப்போதும் ஆதரவாக நிலைப்பாடு எடுக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார் பவார். 

அவர் மேலும், ‘ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, ஒரு விமானத்தின் விலை 650 கோடி ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாயாக ஏன் மாறியது என்று மத்திய அரசு, நாடாளுமன்றத்திடம் விளக்கம் அளிக்க வேண்டும். நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைத்து, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று விளக்கினார்.

சரத் பவார், மோடிக்கு ஆதரவாக கருத்து கூறியவுடன், பாஜக தலைவர் அமித்ஷா, ‘நன்றி பவார் ஜி. கட்சி அரசியலை விட தேச நலன் முக்கியம் என்று முடிவெடுத்துள்ளீர்கள். ராகுல் காந்தி, உங்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரின் கருத்துக்கு செவி கொடுங்கள்’ என்று பதிவிட்டார். 

ஆனால் பவாரின் கருத்து குறித்து தேசியவாத காங்கிரஸ், ‘சரத் பவார் என்ன சொல்ல வந்தார் என்பது குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

 

.