This Article is From Jul 30, 2018

கன்னியாஸ்திரியிடம் பேரம் பேசிய பாதிரியார்..!? - பதவியிலிருந்து நீக்கம்

கேரளாவில் இருக்கும் தேவாலயங்களில் பணி புரிந்து வரும் பாதிரியார்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பரபரப்பைக் கிளப்பி வருகிறது

Thiruvananthapuram:

கேரளாவில் இருக்கும் தேவாலயங்களில் பணி புரிந்து வரும் பாதிரியார்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் புகார்கள் இந்திய அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில், புகார் கொடுத்த கன்னியாஸ்திரியிடம் ஒரு பாதிரியார் பேரம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று லீக் ஆனது. இந்த திடுக் ஆடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கன்னியாஸ்திரியிடம் பேரம் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியாரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

கேரளா, ஜலந்தரைச் சேர்ந்த பிஷப் ஃபிரான்கோ முல்லக்கல், தன்னை 2014 ஆம் ஆண்டு முதல் 2016 வரை 13 முறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதாக புகார் கொடுத்துள்ளார் 46 வயது கன்னியாஸ்திரி. இந்நிலையில், அவர் பதிவு செய்துள்ள புகாரை திரும்பப் பெறுமாறு கூறி பேரம் பேசியுள்ளது போன்ற ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.

ஆடியோ பதிவில் பிஷப்புக்கு வேண்டப்பட்ட பாதிரியார் ஒருவர் பேசுவது போன்று தெரிகிறது. அவர், ‘உங்கள் பெயரில் நிலம் வாங்கிக் கொடுப்பது, நல்ல வேலை ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், இது நாளைக்கே நடந்து விடாது. சிறிது காலம் பிடிக்கும். ஆனால், உங்கள் புகாரை நீங்கள் திரும்பப் பெற வேண்டும். அதுதான் அவர்களின் ஒரே கோரிக்கை’ என்று ஆடியோவில் கூறுகிறார்.

அதற்கு புகார்கொடுத்துள்ள கன்னியாஸ்திரி, ‘எங்களுக்கு நீதி வேண்டும். எங்கள் மரியாதையையும் மாண்பையும் நாங்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை’ என்று பதிலளிக்கிறார்.

விடாமல் அந்த நபர், ‘உங்களின் நிலை எனக்குப் புரிகிறது. இது என்னுடைய சிபாரிசு தான். அதைப் பற்றி யோசியுங்கள்’ என்கிறார்.

இந்த ஆடியோ பதிவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து போலீஸ் தரப்பு, ‘எங்களுக்கு ஆடியோ பதிவு கிடைத்துவிட்டது. கன்னியாஸ்திரியும் அது குறித்து புகார் அளித்துள்ளார். ஆடியோ பதிவு குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சர்ச் அமைப்பான சிஎம்ஐ, ‘பாதிரியார் ஜேம்ஸை, அவர் வகித்து வரும் பதவியிலிருந்து விலச் சொல்லியிருக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு விஷயம். பாதிரியார் சொன்ன கருத்துகளுக்கும் சர்ச் அமைப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பாதிரியாரின் நீக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.

.