This Article is From Aug 22, 2018

கேரள வெள்ளத்துக்கு யு.ஏ.இ அளிக்க உள்ள ரூ.700 கோடியை மத்திய அரசு ஏற்குமா?

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழையை அடுத்து, அங்கு முழு வீச்சில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன

ஹைலைட்ஸ்

  • யு.ஏ.இ, ரூ.700 கோடி தருவதாக கூறியுள்ளது, பினராயி விஜயன்
  • இந்த நிதியுதவியை மத்திய அரசு ஒப்புக் கொள்ளுமா என்று தெரியவில்லை
  • வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் திட்டம் இல்லை, அரசு அதிகாரி
New Delhi:

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழையை அடுத்து, அங்கு முழு வீச்சில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஐக்கிய அரபு அமீரக நாடு, கேரள வெள்ளத்துக்கு 700 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. கேரளாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் ஒரு நெருங்கிய பந்தம் இருக்கிறது. அது மலையாளிகளின் இன்னொரு வீடாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முன்னெடுப்புக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று பதிவிடப்பட்டிருந்தது. இது ஒரு புறம் வரவேற்பைப் பெற்றாலும் இந்த 700 கோடி ரூபாயை நிதியுதவியாக வாங்க மத்திய அரசு சம்மதம் தெரிவிக்குமா என்று சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசும்போது, ‘தற்சமயத்தில் மத்திய அரசு, எந்த வெளிநாடுகளிடம் இருந்தும் நிதியுதவியை பெறப் போவதில்லை. அது ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நிதி கொடுப்பது பற்றி அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 

அதேநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், கேரள வெள்ள நிவாரணத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணம் அனுப்பலாம். அதற்கு வரி விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து இன்னொரு மூத்த மத்திய அரசு அதிகாரி, ‘அரசிடம் தன்னை பதிவு செய்துள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வந்தால், அதற்கு வரி விதிக்கப்படாது. அதே நேரத்தில் பதிவு செய்யப்படாத தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வந்தால், அதற்கு வரி விதிக்கப்படும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால் இது குறித்து கேரள நிதித் துறை அமைச்சரான தாமஸ் ஐசக்கோ, ‘ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து பெறப்படப் போகும் 700 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கும் எந்த நடைமுறையும் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

கேரளாவில் கடந்த 8 ஆம் தேதி முதல் பெய்து வரும் மழையால், 20,000 கோடி ரூபாய்க்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

.