This Article is From Oct 04, 2018

ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யுமா இந்தியா..? - அமெரிக்கா எச்சரிக்கை!

ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது

ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யுமா இந்தியா..? - அமெரிக்கா எச்சரிக்கை!

வரி விதிப்புகளின் நோக்கம் ரஷ்யாவிற்கு பாடம் புகட்டத்தான், அமெரிக்க அதிகாரி

ஹைலைட்ஸ்

  • ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஆயுதங்களை இந்தியா வாங்க உள்ளது
  • ஆனால் இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது
  • அதிபர் ட்ரம்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
Washington:

ரஷ்யாவிடமிருந்து அதி நவீன ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று மற்றும் நாளை, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்தியா-ரஷ்ய மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக அவர் இந்தியா வந்துள்ளார். இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, எஸ்-400 ஆயுதங்களை வாங்கும் ராணுவ ஒப்பந்தத்தை இறுதி செய்ய, ரஷ்யா முயலும் என்று தெரிகிறது.

இந்நிலையில் அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், ‘ரஷ்யாவிடமிருந்து எந்த ஆயுதங்களையும் வாங்க வேண்டாம் என்று எங்கள் நட்பு நாடுகள் அனைத்தையும் கேட்டுக் கொள்கிறோம். மீறி, ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், பலகட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் சீன அரசு, ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கியதற்காக, நிதி சார்ந்த கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா. இந்நிலையில் இன்று இந்தியா, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டால், விளைவுகளைச் சந்திக்கும் என்று அஞ்சப்படுகிறது.

’நட்பு நாடுகளுக்கு வரி விதிப்புகள் போடுவதற்கு முக்கியக் காரணம், ரஷ்யாவிற்கு பாடம் புகட்டத்தான். அவர்களின் முறையற்ற அணுகுமுறைக்கு பதிலடி கொடுக்கவே, இப்படிப்பட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்’ என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

.