தண்ணீர் தர முன்வந்த கேரளா, உதவியை ஏற்க மறுத்த தமிழகம்.!!

கேரள அரசு வழங்கும் நீரை தமிழக முதலமைச்சர் மறுத்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தண்ணீர் தர முன்வந்த கேரளா, உதவியை ஏற்க மறுத்த தமிழகம்.!!
Thiruvanthapuram:

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது.

இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீர் சுமார் 40 சதவீதம் அளவிற்கு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்படி, கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் திணறி வருகின்றன. மேலும் தங்கும் விடுதிகளும் முடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில் தண்ணீர் பிரச்னையால் தவித்து வரும் தமிழகத்திற்கு உதவுவதற்கு கேரள அரசு முன் வந்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கடும் வறட்சியால் தண்ணீர் இன்றி தவித்து வரும் தமிழகத்திற்கு உதவி செய்ய கேரள அரசு முடிவு செய்தது.

20 லட்சம் லிட்டர் தண்ணீரை திருவனந்தபுரத்திலிருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு அனுப்ப கேரள அரசு தயாரானது. இது குறித்து கேரள அரசு தமிழக தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டது. ஆனால் தற்போது தேவைக்கேட்ப தண்ணீர் உள்ளதால், தற்போது தேவையில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிப்பதற்கு தண்ணீர் வழங்க தயார் என்று அறிவித்துள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவிவரும் நல்லுறவின் அடிப்படையில் தமிழக மக்களின் தாகத்தை தீர்க்க கேரள மாநில முதல்வர் அளிக்க முன்வந்துள்ள தண்ணீரை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் வேலுமணி, கேரள அரசு வழங்கும் நீரை தமிழக முதலமைச்சர் மறுத்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர், தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் உதவியை கேரளாவிடம் கோரினோம்.

ஆனால் அதன் தேவை இல்லாமலே சமாளித்து வருகிறோம். மேற்கொண்டு தண்ணீர் உதவி தேவைப்பட்டால் கேரள அரசிடம் உதவி கோரப்படும். இன்று முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்துக்கு பின் தமிழக அரசின் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.