This Article is From Feb 06, 2020

'பேரனாக நினைத்து சிறுவனை அழைத்தேன்' - செருப்பை கழற்றிய விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்!!

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியின சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை கழற்றி விடுமாறு கூறினார். இதனை அந்த சிறுவனும் ஏற்று செருப்பை கழற்ற, இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

'பேரனாக நினைத்து சிறுவனை அழைத்தேன்' - செருப்பை கழற்றிய விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்!!

தனது செயல் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

Udhgagamandalam(TN):

பேரனாக நினைத்துத்தான் சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னேன் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தெப்பக்காட்டில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது. இதனை தொடங்கி வைப்பதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் தெப்பக்காட்டிற்கு வந்தார்.

அப்போது, அங்கிருந்த சிறுவன் ஒருவரை அழைத்து, அவரை தனது செருப்பை கழட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று அந்த சிறுவனும் அமைச்சர் காலில் இருந்த செருப்பை கழற்றினார். இந்த சம்பவம் ஏராளமானோருக்கு மத்தியில் நடந்தது. 
 

.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பல்வேறு கட்சி தலைவர்களும், அமைப்புகளும் கண்டித்துள்ளன. அமைச்சர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், முதுமலையில் ஷூ அணிந்திருந்தேன். அதன் கொக்கிகளை கழற்ற வேண்டும். சுற்றியிருந்தவர்கள் பெரியவர்களாக இருந்தார்கள். அங்கே 2 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். என் பேரனைப் போன்று இருந்தார்கள். அவர்களில் ஒருவரை செருப்பை கழற்றி விடச் சொன்னேன். சிறுவனை எனது பேரனாக எண்ணித்தான் செருப்பை கழற்றுமாறு கேட்டுக்கொண்டேன். இதில் எந்த உள் நோக்கமும் எனக்கு கிடையாது என்று கூறியுள்ளார். 

.