This Article is From May 28, 2020

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விரட்டியடிக்க களமிறக்கப்பட்ட DJ - வைரல் வீடியோ!

Locusts attack: “இது மிகப் பெரும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு. 30 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இப்படி நடக்கும்"

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: விரட்டியடிக்க களமிறக்கப்பட்ட DJ - வைரல் வீடியோ!

Locusts attack in UP: "நாம் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த நேரத்தில் இது வந்துள்ளது சிக்கலை மேலும் பெரிதாக்கியுள்ளது.”

ஹைலைட்ஸ்

  • பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன வெட்டுக்கிளிகள்
  • இவை பாலைவன வெட்டுக்கிளி படையெடுப்பு எனப்படுகிறது
  • விளை நிலங்களை இந்த வெட்டுக்கிளிகள் வேட்டையாடிவிடும்

வட இந்தியாவின் பல மாநிலங்களில் பயிர் உண்ணும் வெட்டுக்கிளிகளின் பிரமாண்ட படையெடுப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் விவசாய நிலத்தில் வெட்டுக்கிளிகளை விரட்டியடிப்பதற்கு DJ செட் களமிறக்கப்பட்டுள்ளது. இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பயிர்களை சாப்பிட்டு சேதம் விளைவித்த வெட்டுக்கிளிகள், உத்தர பிரதேசத்திலும் அடியெடுத்து வைத்துள்ளன. 

இந்நிலையில் உத்தர பிரதேச போலீஸ் அதிகாரி ராகுல் ஸ்ரீவஸ்தவா, மாநிலத்தின் ஜான்சி பகுதியில் எடுக்கப்பட்ட 30 விநாடி வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘DJ வாகனம்' விவசாய நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் பாட்டுகள் போட பயன்படுத்தப்படும் இந்த வாகனம் மூலம், விளை நிலத்தின் நடுவில் பாட்டு இசைக்கப்படுகிறது. இதன் மூலம் வெட்டுக்கிளிகளின் வரவைத் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

ஸ்ரீவஸ்தவா, “ஆட்டம் பாட்டத்துக்கு மட்டுமல்ல DJ-க்கள்… இவைகள் மூலம் பயிர் உண்ணும் வெட்டுக்கிளிகளையும் விரட்டியடிக்க முடியும். தட்டு வைத்தோ அல்லது வேறு வகையில் சத்தம் எழுப்பியோ வெட்டுக்கிளிகளை விரட்டலாம்,” என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். 

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், ‘பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்த மாதத் தொடக்கத்தில் ராஜஸ்தானுக்குள் நுழைந்துள்ளன இந்த பாலைவன வெட்டுக்கிளிகள். பல மேற்கு மாவட்டங்களிலும் இந்த வெட்டுக்கிளிகள் பிரிந்துள்ளன. நம் நாட்டில் இதைப் போன்ற வெட்டுக்கிளிகள் தென்படும் என்றாலும், மிகக் குறைந்த அளவிலேயே இதுவரை பார்க்கப்பட்டுள்ளன,' என்று தெரிவித்துள்ளது. 

வன உயிர் இன்ஸ்பெக்டர் ஜெனரல், சவுமித்ரா தாஸ்குப்தா, “இது மிகப் பெரும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு. 30 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இப்படி நடக்கும். நாம் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த நேரத்தில் இது வந்துள்ளது சிக்கலை மேலும் பெரிதாக்கியுள்ளது.” என்று வருத்தப்படுகிறார். 

உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஆங்காங்கே பார்க்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ஜான்சி மாவட்டத்தின் மாஜிஸ்திரேட் அந்த்ரா வம்சி, “ஈரான், பாகிஸ்தான், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் வழியாக தற்போது உத்தர பிரதேசத்திற்கு வெட்டுக்கிளிகளின் படைகள் வந்துள்ளன. மிகவும் உஷாராக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. 

பல இடங்களில் சத்தம் எழுப்புவதற்காக பிரத்யேக ஏற்பாடுகளை செய்துள்ளோம். விவசாயிகளிடமும் சத்தம் எழுப்பி இந்த வெட்டுக்கிளி படையெடுப்பைத் தவிர்க்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த படையெடுப்பால் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், கண்ணில் படும் பசுமையான விளை நிலங்களை இவை அழித்துவிடும்,” என்கிறார். 


 

.