This Article is From Dec 19, 2018

கலைஞர் சிலை திறப்பு விழாவுக்காக மின்சாரம் திருடப்பட்டதா? திமுக விளக்கம்

கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருடப்பட்டது என்ற அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டிற்கு திமுக பதில் அளித்துள்ளது.

கலைஞர் சிலை திறப்பு விழாவுக்காக மின்சாரம் திருடப்பட்டதா? திமுக விளக்கம்

கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருடப்பட்டது என்ற அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டிற்கு திமுக பதில் அளித்துள்ளது.

சென்னையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில், திமுகவினர் மின்சாரத்தை திருடி நடத்தியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவானது கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாடு முழுவதும்  அனைவரின் பார்வையும் இந்த விழா மீதே குவிந்தது.

இதனிடையே, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் மின்சாரத்தை திருடி கலைஞர் சிலை திறப்பு விழாவை நடத்தியதாகவும், அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் மின்சாரத்தை திருடியதற்கான ஆதாரம் என்று கூறி வீடியோ ஒன்றையும் ஜெயக்குமார் காண்பித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கலைஞர் சிலை திறப்பு விழா இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த கூட்டம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுக்கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும்.

சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால் பொதுமக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு பன்மடங்காக அதிகரித்து வருவதால், இதை பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் ஜெயக்குமார் விழாவுக்கு களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளரிடம் மின் திருட்டு என வாட்ஸ்அப்பில் வந்த தகவலை செய்தியாக காண்பித்து குற்றம் சுமத்துகிறார்.

வாட்ஸ்அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசினால் அமைச்சர் மீதும் எவ்வளவோ குற்றம் சாட்டலாம். ஆனால் திமுகவினர் என்றைக்கும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

அமைச்சரின் பேச்சில் என்ன தெரியவருகிறது என்றால் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பார்த்து ஆளுங்கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கி போய் இருப்பது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.