This Article is From May 05, 2020

உணவு தேடி பள்ளிக்குள் நுழைந்த சிங்கம்… அப்புறம் நடந்தது- திக் திக் வீடியோ!

Viral video: இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

உணவு தேடி பள்ளிக்குள் நுழைந்த சிங்கம்… அப்புறம் நடந்தது- திக் திக் வீடியோ!

Viral video: கிர் சோம்நாத் மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு சுமார் 60 சிங்கங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன

Viral video: குஜராத் மாநிலத்தில் உள்ள பஸ்வாலா கிராமத்தில் சிங்கம் ஒன்று, உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. அப்போது அச்சிங்கம் எதிர்பாராத விதமாக பூட்டியிருந்த பள்ளிக்குள் புகுந்து மாட்டிக் கொண்டது. இந்த சம்பவம் குறித்தான வீடியோவை இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, பஸ்வாலாவில் உள்ள பள்ளிக்கு அருகில் ஒரு கால்நடையைத் தேடி சிங்கம் வந்துள்ளதாக தெரிகிறது. கால்நடையின் உரிமையாளர் சிங்கத்தைப் பார்த்து விரட்டியுள்ளதைத் தொடர்ந்து, அது அருகிலிருந்த பள்ளிக்குள் சென்றுள்ளது. ஊருக்குள் சிங்கம் புகுந்தது குறித்து உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர், பள்ளியின் அனைத்து வாயில்களையும் மூடியுள்ளனர். பின்னர், ஒரு சிறிய கூண்டை, பள்ளி வாயில் ஒன்றுக்கு முன்னர் வைத்துள்ளனர். அந்த கூண்டிற்குள் சிங்கம் வந்துவிடும் என்று காத்திருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

பின்னர், மயக்க மருந்து கொடுத்து சிங்கத்தைப் பிடித்துள்ளது வனத் துறை. மயக்கமடைந்த சிங்கத்தை ஜசாதர் விலங்குகள் மீட்பு மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள், சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் திறந்து விட்டுள்ளனர். 

வீடியோவைப் பகிர்ந்த அதிகாரி நந்தா, “பள்ளிக்கு வந்த சிங்கம் தன்னையும் சேரத்துக் கொள்ளச் சொல்லி கேட்டுள்ளது,” என்று கேலியாக பதிவிட்டுள்ளார். 
 

ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து பலரும் அதைப் பார்த்து கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. கிர் சோம்நாத் மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு சுமார் 60 சிங்கங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. அடிக்கடி சிங்கங்கள், அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் நடக்கின்றன. கால்நடை இறந்த பின்னர் அதற்கு இழப்பீட்டை வனத் துறை, கிராமவாசிகளுக்குக் கொடுத்துவிடுவதாக தகவல். 

Click for more trending news


.