This Article is From May 11, 2020

''ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்!'' - திருமாவளவன் வலியுறுத்தல்

விழுப்புரம் சிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

''ஈவிரக்கமில்லா மனநோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்!'' - திருமாவளவன் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • 'ஈவிரக்கமில்லாத மன நோயாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும்'
  • சிறுமியை கொன்றவர்கள் குறித்து திருமாவளவன் காட்டமான அறிக்கை
  • பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்

விழுப்புரம் சிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈவிரக்கமில்லாத மனநோயாளிகளான குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது-

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்னும் சிறுமியை, அதே ஊரைச்சார்ந்த கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைகளைக் கட்டிப்போட்டு, வாயில் துணியைத் திணித்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். உடல்முழுவதும் எரிந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்தில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக் கொடூரத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.

சிறுமியின் தந்தை ஜெயபாலுடன் முன்னதாக ஏற்பட்ட தகராறையொட்டி, அந்த இருவரின்மீது அவர் காவல்துறையில் புகார்செய்தார் என்பதனால், அவர்கள் இருவரும் ஜெயபால் மீதுள்ள பழிவாங்கும் வெறியிலும் குடிபோதையிலும் இந்தக் குரூரத்தைச் செய்துள்ளனர் என்று தெரியவருகிறது. ஈவிரக்கமில்லாத அந்த மனநோயாளிகளின் கொடிய வன்செயலை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிகவன்மையாகக் கண்டிக்கிறது .

அச்சிறுமியின் வாக்கு மூலத்தையடுத்து அந்த இருவரையும் காவல்துறையினர் உடனே கைதுசெய்துள்ளனர். எனினும், அவர்கள் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதால், காவல்துறையினர் அவர்களை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்வதற்குத் துணைபோய் விடுவார்களோ என்கிற கவலையும் உடன் எழுகிறது. வழக்கமாக நடைமுறையில் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றுவதுதானே காவல்துறையினரின் முதன்மையான கடமையாக உள்ளது. ஒருவேளை அச்சிறுமி வாக்குமூலத்தில் அவ்வாறு கூறமுடியாமல் போயிருந்தால் குற்றவாளிகளைக் கைதுசெய்வது நடந்திருக்குமா என்பதே கேள்விக்குறி தான்!

எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் காவல்துறையினர் ஆளுங்கட்சியினரின் அழுத்தத்துக்கு ஆளாகிவிடாமல், அவர்களை ஜாமீனில் வெளிவிடாமல், "சிறார் நீதி சட்டம் 2015இன்" கீழ், சிறப்பு-விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கை நடத்தி, விரைந்து கடுமையாகத் தண்டிக்க ஆவன செய்யவேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

டாஸ்மாக் கடைகளைத் திறந்ததும் இத்தகைய கொடுஞ்செயலுக்கு ஒரு காரணம் என்பதை இச்சூழலில் ஆட்சியாளர்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகிறோம்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம். அத்துடன், சிறுமியை இழந்த ஜெயபால் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

.