This Article is From Jun 29, 2019

இந்தியா முழுவதும் ஒரே ரேசன் கார்டு முறைக்கு வைகோ கண்டனம்!!

குடும்ப அட்டைத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிற தமிழக அரசு, பா.ஜ.க. அரசின் ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை ஏற்கக் கூடாது. கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஒரே ரேசன் கார்டு முறைக்கு வைகோ கண்டனம்!!

மத்திய அரசின் திட்டம் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஒரே ரேசன் கார்டு கொண்டு வருவது தொடர்பான திட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இரண்டாவது முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முன்பைவிட மூர்க்கத்தனமான வேகத்தில் இயங்கத் தொடங்கி இருக்கிறது.

ஒரே தேர்தல்; ஒரே தேசிய கல்விக் கொள்கை; ஒரே சுகாதாரக் கொள்கை; ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே வரி என்பதில் தொடங்கி, தற்போது நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்திற்கு அகரம் எழுதி உள்ளனர்.

டெல்லியில் மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் தலைமையில் நடந்த மாநில உணவுத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறைக் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திவரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. இதனைச் சீர்குலைக்கவும், வட இந்தியா விலிருந்து புலம்பெயரும் மக்களை ஊக்குவித்துத் தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் இருந்து குடியேற்றவும், ஏழை எளிய சாதாரண தொழிலாளர்களுக்கு பொது விநியோக முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று பா.ஜ.க. அரசு ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை. பொது விநியோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம். இந்தியா முழுவதும் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஒரே முறையில் மாற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் நாட்டில் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, மத்திய அரசு ‘ஒரே நாடு; ஒரே ரேசன்' திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

குடும்ப அட்டைத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிற தமிழக அரசு, பா.ஜ.க. அரசின் ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை ஏற்கக் கூடாது. கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்

.