This Article is From Dec 03, 2018

7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டவர்கள் கைது!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டவர்கள் கைது!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.

அதன்படி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஆளுநருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பிற்பகல் நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

.