This Article is From Jan 27, 2020

உமர் அப்துல்லாவின் புகைப்படம் மிகுந்த வருத்தமளிக்கிறது: மு.க.ஸ்டாலின் உருக்கம்!

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, பாரூக் அப்துல்லா மற்றும் பிற அரசியல் தலைவர்கள் விசாரணை அல்லது உரிய செயல்முறை இல்லாமல் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

உமர் அப்துல்லாவின் புகைப்படம் மிகுந்த வருத்தமளிக்கிறது: மு.க.ஸ்டாலின் உருக்கம்!

உமர் அப்துல்லாவின் புகைப்படத்தை பார்த்து மிகுந்த வருத்தமடைந்தேன் - மு.க.ஸ்டாலின்

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லாவின் புகைப்படங்கள் மிகுந்த வருத்தமளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370வது சட்டப்பிரிவை, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாவும் பிரித்து உத்தரவிட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொலைக்காட்சி, மொபைல், இணைய சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில், முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோரும் அடங்குவர். தொடர்ந்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 5 மாதங்களை கடந்த நிலையில் அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. 

எனினும், அங்கு அனைத்து பகுதிகளுக்கும் இணைய சேவைகள் முழுவதுமாக வழங்கப்படவில்லை. அண்மையிலே அதுவும், 2ஜி வேகத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களும் விடுவிக்கப்படவில்லை. 

இதற்கிடையே, பனி மூடிய பின்னணியில் நீண்ட தாடியுடனும், கம்பளித் தொப்பி அணிந்தபடியும் இருக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் பிகிர்ந்துள்ளார். மேலும், அவர் அதில் கூறியதாவது, பல மாதங்களாக வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லாவின் புகைப்படத்தை பார்த்து மிகுந்த வருத்தமடைந்தேன். காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, பாரூக் அப்துல்லா மற்றும் பிற அரசியல் தலைவர்கள் விசாரணை அல்லது உரிய செயல்முறை இல்லாமல் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இப்படி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை மத்திய அரசு உடனே விடுவித்து அங்கு இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

.