This Article is From Dec 04, 2018

அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்

வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார்.

அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனை கண்டித்து அவர்கள வேலை நிறுத்த போராட்டத்தை இன்று அறிவித்துள்ளனர். இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில், அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம், ஊதிய உயர்வு, பணி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதாக அறிவித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இதனால் 200 - 300 மாணவர்களின் மருத்துவ இடங்கள் ரத்து செய்வதற்கான ஆபத்தான சூழ்நிலை உருவாகும்.

இதை கருத்தில் கொண்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

.