This Article is From May 15, 2019

நிலநடுக்கங்களால் சுருங்கும் நிலவு: ஆய்வு கூறும் தகவல்!

சில நூறு மில்லியன் வருடங்களில் நிலவின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில், அது 150 அடிகள் வரை சுருங்கியுள்ளது.

நிலநடுக்கங்களால் சுருங்கும் நிலவு: ஆய்வு கூறும் தகவல்!

150 அடிகள் வரை சுருங்கியுள்ள நிலவு

Washington:

அண்மையில், நாசா நிறுவனத்தின் லூனார் ரெக்கொனைஸ்சன்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) (LRO) எடுத்தப் புகைப்படங்களை, திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளது. அது என்ன்வென்றால், நிலவு சீராக சுருங்கிக் கொண்டும், அதில் பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், இவற்றிற்கு காரணம் நில நடுக்கங்கள் எனவும் தெரியவந்துள்ளது.

நிலவில் வட துருவத்திற்கு அருகில் உள்ள மேரே ஃப்ரிகோரிஸ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளாக நாசா நிறுவனத்தால் சுமார் 12,000-க்கு மேற்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. புவியியல் பார்வையில் மிகப்பெரிய பரப்பாக கருதப்படும் இந்த மேரே ஃப்ரிகோரிஸ், சுருங்கிக்கொண்டும் பிளவுபட்டுக்கொண்டும் இருக்கிறது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பூமியைப் போன்று டெக்டானிக் தட்டுகள் நிலவில் இல்லை என்றாலும், நிலவில் ஏற்படும் வெப்ப மாற்றங்களினால் இந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது. 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலவு தொன்றிய பொழுது இருந்த வெப்பத்துடன் ஒப்பிடுகையில் மெதுவாக தன் வெப்பத்தை இழந்துகொண்டிருக்கிறது நிலா. இந்த வெப்ப இழப்புதான், நில நடுக்கங்களுக்குக் காரணம். இதன் விளைவாக நிலவின் பரப்பு சுருங்கிக்கொண்டும், பிளவுபட்டுக்கொண்டும் உள்ளது. 

நிலவின் மேற்பரப்பு மிகவும் திடமானது என்பதால், நிலவின் உட்பரப்பில் ஏற்படும் இந்த சுருக்கங்களும் பிளவுகளும், நிலவின் மேற்பரப்பையும் பாதிக்கிறது. இந்த சுருக்கங்கள் மற்றும் பிளவுகள் நிலவின் மேற்பரப்பில் உள்ள சமனை மாற்றி, அந்த இடத்தை மேலும் கீழுமாக தள்ளி, அதன் சமனை சீர்குலைக்கிறது. இது உட்பரப்பில் ஏற்படும் மாற்றத்தாலும், உட்பரப்பில் உள்ள ஒரு பகுதி மட்டும், உந்தி மேலே தள்ளப்படுவதாலும் ஏற்படுகிறது.

இந்த ஆய்வு கூறும் மற்றொரு முக்கிய தகவல் என்னவென்றால், சில நூறு மில்லியன் வருடங்களில் நிலவின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில், அது 150 அடிகள் வரை சுருங்கியுள்ளது.

ghoqn6g

1960கள் மற்றும் 70களில், முதன்முதலில் அப்பலோ வின்வெளி வீரர்கள், நிலவில் நடக்கும் நில அதிர்வுகளை ஆராயத் துவங்கினார்கள். அதில் அதிகபட்சமான நிலவின் நில நடுக்கங்கள், நிலவின் உட்பரப்புலேயே நடக்கிறது என்றும், அதன் மேற்பரப்பில் மிக சிறிய சக்தியுள்ள குறைந்த அளவிலான நில நடுக்கங்களே ஏற்பட்டுள்ளன எனவும் கண்டறிந்தார்கள். அப்பலோ வின்வெளி வீரர்கள் நிலவின் நில அதிர்வுகளை பற்றி ஆராய்ந்து பதிவு செய்யப்பட்ட தகவல்கள், நேச்சர் ஜியோசயின்ஸ் (Nature Geoscience) என்ற மாத இதழ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. 

இந்த ஆய்வை நடத்தியவர்களில், மேரிலாந்து பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஒருவரான நிகோலஸ் ஸ்ச்மேர்(Nicholas Schmerr) இது குறித்து கூறுகையில், "இன்றும் இந்த நில அதிர்வுகள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன" எனக் கூறுகிறார்.

.