This Article is From Jan 31, 2019

மாஜி சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவின் ராஜினாமா ஏற்கப்படவில்லை; தொடரும் சர்ச்சை!

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வெர்மா, தனது பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார்

ஜனவரி 31 ஆம் தேதியுடன் வெர்மா, ஓய்வு பெறுவதாக இருந்தது. (கோப்புப் படம்)

New Delhi:

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வெர்மா, தனது பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்க மறுத்துள்ளதாக NDTV-க்கு நம்பத்தகுந்த வட்டாரத்திடமிருந்து தகவல் வந்துள்ளது. 

சிபிஐ அமைப்புக்குள் சில மாதங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சை கிளம்பியது. அமைப்பின் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும், அமைப்பின் இயக்குயநராக இருந்த அலோக் வெர்மாவுக்கும் பனிப் போர் மூண்டது. இருவரும் பரஸ்பரம் மற்றவர் மீது லஞ்சப் புகார் சுமத்தினர். 

இதையடுத்து இருவரும் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வெர்மா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வெர்மாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் சிபிஐ இயக்குநர் பதவி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பணி ஆணை பெற்ற ஒரே நாளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான சிறப்புக் குழு அவரது பதவியைப் பறித்து, தீயணைப்புச் சேவைத் துறைக்கு மாற்றம் செய்தது. சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து வெர்மா நீக்கப்பட்டு, தீயணைப்பு சேவை டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்தப் பதவியை ஏற்க முடியாது என்று சொல்லி, அவர் பணியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில் அவரது ராஜினாமா குறித்து நம்மிடம் பேசிய ஒரு மூத்த அமைச்சர், ‘வெர்மாவின் மீதிருக்கும் புகார் குறித்து விசாரணை நிறைவு பெறாத நிலையில் ராஜினாமா ஏற்கப்படாது' என்று கூறினார். 

ஜனவரி 31 ஆம் தேதியுடன் வெர்மா, ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால், பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் விலகினார். ராஜினாமா கடிதத்தில் வெர்மா, ‘நியாயமான நீதி மறுக்கப்பட்டுள்ளது. நான் இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதில் நடவடிக்கை தெளிவாக இருந்துள்ளது' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை கிளப்பும் நிலையில் பிரதமர் அமைத்த குழுவில் உறுப்பினராக இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி, ‘வெர்மா மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை' என்றார். நாளை பிரதமர் தலைமையிலான சிறப்புக் குழு சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுக்க உள்ளது. 

.