நீதிபதிகளுக்கு வழக்கு நியமனம், தலைமை நீதிபதிக்கே அதிகாரம்- உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில், எந்த நீதிபதி எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு

New Delhi:

உச்ச நீதிமன்றத்தில், எந்த நீதிபதி எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு என உச்ச நீதிமன்ற தெரிவித்துள்ளது.

முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் தாக்கல் செய்த மனுவுக்கு, இவ்வாறு பதிலளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். நீதிபதிகளுக்கான வழக்கு ஒதுக்கீட்டை, அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் குழு முடிவு செய்ய உத்தரவிட வேண்டும் என சாந்தி பூஷன் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், அப்படி ஒரு நடைமுறை, குழப்பத்தையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்றார்.

supreme court judges press conference

“வழக்குகளுக்கு நீதிபதிகளை நியமிக்கும் பொருப்பு தலைமை நீதிபதிக்கே உண்டு. அரசியல் அமைப்பு, தலைமை நீதிபதி மீது எந்த கட்டுப்பாட்டையும் விதிப்பதில்லை. இதற்கு முந்தைய தீர்ப்புகளிலும், தலைமை நீதிபதிதான், வழக்கு நியமனங்களை செய்ய வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டும் உள்ளது." என்றது உச்ச நீதிமன்றம்.

ஜனவரி 12-ம் தேதி தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் இருக்கும் 4 முக்கிய நீதிபதிகள், செய்தியாளர்களை சந்தித்து, தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்தனர். நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் சட்டம் முறையான நிலையில் இல்லை என்றும், முக்கிய வழக்குகளை, அனுபவம் குறைந்த நீதிபதிகளிடம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்குவதாகவும் குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்துக்கு பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரங்கள் குறித்த சலசலப்பு தொடர்ந்து வருகிறது.