This Article is From Apr 26, 2019

பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சிலைக் கடத்தல் வழக்குகள் குறித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், அதற்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, ஐஜி பொன் மாணிக்கவேல் தனது பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி, அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில் பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக அதிகாரிகள் உள்ளிட்ட 66 காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.