This Article is From Dec 02, 2019

பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்: தெலுங்கானாவில் தீவிரமடையும் போராட்டம்!

கடந்த புதன்கிழமையன்று பணி முடித்து வீடு திரும்பி வரும் வழியில் கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார்.

பெண் மருத்துவர் கொல்லப்பட்டதற்கு எதிராக தெலுங்கானாவில் மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Hyderabad:


ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அந்த பெண்ணின் தந்தை மற்றும் மகளிர் அமைப்பனர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதனிடையே, எப்ஐஆர் பதிவு செய்ய தாமதப்படுத்திய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய 4 லாரி டிரைவர்கள் மற்றும் கிளினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றவாளிகளை விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என நூற்றுக்கணக்கானவர்கள் ஷாத்நகர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.

கடந்த புதன்கிழமையன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.  

இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. 

இதுதொடர்பாக என்டிடிக்கு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது, அவரது போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆனதாக தான் நினைத்தோம். இதையடுத்து, சுங்கச்சாவடி அருகே அவரை தேடி பார்த்தோம், அவர் கிடைக்காததால், காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றோம். ஆனால், போலீசாரால் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு காவல் நிலையமாக மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டோம்.  

முதலில் RGIA நகர்ப்புற காவல் நிலையத்தில் இருந்து கிராமப்புற காவல்நிலையத்திற்கும், பின்னர் அங்கிருந்து மீண்டும் நகர்ப்புற காவல்நிலையத்திற்கும் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டோம், சம்பவப் பகுதி யாருடைய அதிகார வரம்பில் வரும் என்பதில் காவல்துறையினர் குழப்பமடைந்தனர்.

இதையடுத்து, நள்ளிரவு 3 மணி அளவில், 2 காவலர்கள் உதவியுடன் நாங்கள் எனது மகளை தேடத்தொடங்கினோம் என்றார். தொடர்ந்து, சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததற்கு பதிலாக உடனடியாக நேரடியாக சென்று தேடுதல் முயற்சியில் விரைவாக ஈடுபட்டிருந்தால் என் மகள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று அவர் வேதனை தெரிவித்தார். 

நவ.,27 அன்று இரவு அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு அப்பெண் தீவைத்து எரிக்கப்பட்டதும் முதல்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எரிந்த நிலையில் பெண் டாக்டரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சிறிது தூரத்தில் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என ஷம்சாபாத் போலீஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

.