This Article is From Jun 09, 2020

“10 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து..!”- தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு

முன்னதாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வுகளின்றி தேர்ச்சிப் பெறுவார்கள் என்று தெலங்கானா அரசு அறிவித்திருந்தது. 

“10 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து..!”- தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு

உயர் நீதிமன்றத்தின் அனுமதிப்படி, ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற இருந்தன. 

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன
  • தேர்வுகளின்றி இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சிப் பெறுவார்கள்
  • தெலங்கானாவிலேயே ஐதராபாத்தில் தொற்று அதிகமாக உள்ளது
Hyderabad:

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வருவதனால் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாது என்று தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்வுகள் நடத்தப்படாமலேயே மாணவர்கள் இந்த ஆண்டு தேர்ச்சி பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார். 

“10 ஆம் வகுப்பில் மாணவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதைப் பொறுத்து அவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சிப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்து அரசு வருங்காலத்தில் முடிவெடுக்கும்,” என்று கூறியுள்ளார் சந்திரசேகர் ராவ். 

எஸ்எஸ்சி தேர்வுகளை எப்படி நடத்துவது என்பது குறித்து தெலங்கானாவில் நடத்தப்பட்ட உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 5,34,903 மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மார்ச் 19 ஆம் தேதி தெலங்கானாவில் 10 ஆம் வகுப்பு எஸ்எஸ்சி தேர்வுகள் ஆரம்பமாகின. 6 பாடங்களில் 11 தேர்வுகளுக்கான கால அட்டவணைப் போடப்பட்டது. 3 தேர்வுகள் முடிந்த நிலையில், தேசிய முழு முடக்க உத்தரவு போடப்பட்டது. இதனால், மீதமிருந்த அனைத்துத் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து தெலங்கானா உயர் நீதிமன்றம், மாற்று தேதிகளில் தெலங்கானா அரசு தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதே நேரத்தில் கோவிட்-19 தொற்று அதிகமாக இருந்த ஐதராபாத் பெரு மாநகராட்சியில் மட்டும் தேர்வுகள் நடத்த அனுமதி அளிக்கவில்லை. தெலங்கானாவிலேயே ஐதராபாத் நகரத்தில்தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உயர் நீதிமன்றத்தின் அனுமதிப்படி, ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற இருந்தன. 

ஆனால், மாநிலத்தில் இன்னும் கொரோனா நிலவரம் தீவிரமாக இருந்த நிலையில் முதல்வர் ராவ், உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டி தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து விவாதித்தார். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இதைப் போன்ற நிலைமை எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில்தான் தேர்வுகளை ரத்து செய்வது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. 

முன்னதாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வுகளின்றி தேர்ச்சிப் பெறுவார்கள் என்று தெலங்கானா அரசு அறிவித்திருந்தது. 


 

.