This Article is From Aug 23, 2018

கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி உதவி செய்வோர்க்கு வரிச் சலுகைகள்

கேரள அரசு உடனடி நிவாரண நிதியாக 2000 கோடி கேட்டுள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது

கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி உதவி செய்வோர்க்கு வரிச் சலுகைகள்

புது தில்லி, ஆகஸ்ட் 22 (பிடிஐ): பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கும் வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளுக்கும் முழு வரிவிலக்கு வழங்கப்படுகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்காக செயல்படும் என்.ஜி.ஓ-க்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளுக்கு ஐம்பது சதவீதம் வரிச்சலுகை வழங்கப்படும்.

மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) தனி நபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகளின் நிதியுதவிகளை வரவேற்பதாக அறிவித்தார். இவ்வாறு அளிக்கப்படும் நிதியுதவிகள் பிரிவு - 80ஜியின் கீழ் முழு வரிவிலக்கு பெறும். “என்.ஜி.ஓக்கள் வருமான வரிச் சட்டத்தின் படி வரிவிலக்கிற்குத் தகுதி பெற்றிருந்தால், 80ஜியின் கீழ் 50 சதவிகித வரிவிலக்கு பெறலாம்”, எனவும் அவர் தெரிவித்தார்.

கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதியுதவிகளுக்கு முழு வரிவிலக்கு உண்டு. பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதியுதவிகளுக்கு 80ஜி வருமான வரி ரசீதினை உடனடியாகப் பெற பரிவர்த்தனை விவரங்களை முகவரியுடன் pmnrf@gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். மத்திய அரசின் கொள்கை முடிவின்படி பிறநாட்டு அரசுகளிடமிருந்து நிதியுதவிகளை எற்காத போதும், சில விதிமுறைகளைப் பின்பற்றும்பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் தனிநபர் நிதியுதவிகளுக்கு எந்தத் தடைகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்.சி.ஆர்.ஏ (FCRA) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுவதிலும் தடை இல்லை. ஐக்கிய அரபு அமீரக அரசு வெள்ள நிவாரண நிதியாக 100 மில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 700 கோடி) வழங்கியிருந்தாலும், இந்திய அரசு அதை ஏற்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. கேரள அரசு உடனடி நிவாரண நிதியாக 2000 கோடி கேட்டுள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நேற்று மாலை வரை 309 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது.

வெள்ளச்சேதங்களின் இதுவரையிலான மதிப்பு 20,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம் மற்றும் இதர மத்திய அரசு திட்டங்களின் கீழ் 2600 கோடி நிவாரண நிதி கேட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.