This Article is From Feb 19, 2020

'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்' - முதல்வர் பழனிசாமி நம்பிக்கை!!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் குற்றம் சாட்டினார்.

'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்' - முதல்வர் பழனிசாமி நம்பிக்கை!!

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முடிவு ஏதும் எடுக்காமல் உள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நல்ல முடிவை எடுப்பார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில் 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானம் செப்டம்பர் 9-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இருப்பினும் இந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முடிவு ஏதும் எடுக்காமல் உள்ளார். 

இந்த நிலையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் குற்றம் சாட்டினார்.

இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் அளித்து பேசினர். முதல்வர் பழனிசாமி தனது பதிலில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அவர்களது விடுதலைக்காக தமிழக அரசும், தமிழக மக்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 7 பேர் மீது கொண்ட அக்கறையின் காரணமாகத்தான் அவர்களுக்கு பரோல் வழங்கினோம் என்றார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், '7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையின் நிலைப்பாட்டை தமிழக அரசு கவர்னரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டது. கவர்னருடைய அதிகாரத்தில் நம்மால் தலையிட முடியாது. நல்ல முடிவை அவர் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்' என்று தெரிவித்தார். 
 

.