This Article is From Nov 18, 2018

‘வருகிறது கனமழை!’- தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

நவம்பர் 20 முதல் 22 வரை, டெல்டா பகுதிகளிலும் சென்னையிலும் நல்ல மழை பொழிவு இருக்கும். கஜா புயலை அடுத்து மழை பெய்யாமல் இருந்த இடங்களில் இந்த முறை மழை பெய்யும்.

‘வருகிறது கனமழை!’- தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

தமிழகத்தை உலுக்கிய கஜா புயலின் தாக்கம் நீங்கியுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழையால் அடுத்து எற்பட உள்ள மழை பொழிவு குறித்து மிகப் பிரபலமான வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து வெதர்மேன் ஃபேஸ்புக்கில், ‘நவம்பர் 20 முதல் 22 வரை, டெல்டா பகுதிகளிலும் சென்னையிலும் நல்ல மழை பொழிவு இருக்கும். கஜா புயலை அடுத்து மழை பெய்யாமல் இருந்த இடங்களில் இந்த முறை மழை பெய்யும்.

டெல்டா பகுதிகளைப் பொறுத்தவரை, நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் நல்ல மழை பொழிவு இருக்கும். அதே நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் நவம்பர் 20 முதல் 22 வரை மழை பெய்யக்கூடும்.

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பொழிவைக் கொடுக்கும். சென்னையைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்காவது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த முறை புயல் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. பொதுவாக வடக்கு தமிழகத்தில் நல்ல பொழிவை எதிர்பார்க்கலாம்' என்று பதிவிட்டுள்ளார்.

.