This Article is From Sep 10, 2020

நீட் அச்சத்தினால் அரியலூர் மாணவர் தற்கொலை! மத்திய அரசு மீது கடும் விமர்சனம்!!

இந்த மரணத்திற்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், “இரக்கமற்ற மத்திய அரசு நீட் தேர்வினை எப்போது நிறுத்தும். இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் அச்சத்தினால் அரியலூர் மாணவர் தற்கொலை! மத்திய அரசு மீது கடும் விமர்சனம்!!

19 வயதான விக்னேஷின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

19 வயதான விக்னேஷின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னர் இரண்டு முறை நீட் தேர்வில் பங்கேற்றிருக்கிறார். உயிரிழந்த நபர் எந்த தற்கொலைக் குறிப்பையும் எழுதவில்லை என்றும், அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாக அவரது பெற்றோர் கூறுகிறார்கள் என்றும், அவரை தற்கொலைக்கு தூண்டியது எது என்பதை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் அரியலூர் எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணத்திற்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், “இரக்கமற்ற மத்திய அரசு நீட் தேர்வினை எப்போது நிறுத்தும். இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“மருத்துவக் கல்வித் தரத்தை உயர்த்தவும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்கவும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது. உண்மையாகவே மருத்துவக் கல்வியின் தரம் உயருகிறது என்றால், கடந்த ஆண்டு நீட் தேர்வில் விக்னேஷை விட, மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பணத்தைக் கொட்டிக் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது.“

“அதேபோல், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்த நிலையில், விக்னேஷிடம் பணம் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கக் கூடாது. இந்த இரண்டுமே நடக்காத நிலையில் நீட் தேர்வால் யாருக்கு என்ன பயன்?” என பாமக தலைவர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக இதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தும் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துக்கொண்டார்.

பல பிஜேபி அல்லாத ஆளும் மாநிலங்கள் கோவிட் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு ஒத்திவைக்க முயன்றுள்ளன. கடந்த வாரம், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்தது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தமிழ்நாடு மருத்துவ சேர்க்கைக்கான நுழைவு சோதனைகளை ரத்து செய்தது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை வழங்கியது. தனியார் பயிற்சியை எடுக்கும் நகர்ப்புற வசதியான வகுப்புகளுக்கு நீட் அமைப்பு ஆதரவளிப்பதாக அரசு உணர்கிறது. தனியார் பயிற்சியை பெற முடியாத ஏழை மாணவர்களுக்கான வாய்ப்பை நீட் மறுக்கிறது என்று அரசாங்கம் வாதிடுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசை நீட் தேர்வை ரத்து செய்ய கேட்டுக்கொண்டார். ஆனால், மத்திய அரசு முதல்வரின் கோரிக்கையை மறுத்தது.

.