This Article is From Sep 12, 2019

1-Rupee Idli: 1 ரூபாய்க்கு இட்லி விற்றுவந்த கோவை பாட்டிக்கு குவியும் உதவி- நெகிழவைக்கும் சம்பவம்!

நெட்டிசன்கள், கமலாத்தாளின் மனிதநேய சேவையையும், ஆனந்த் மஹிந்திரா சரியான நேரத்தில் அதை தெரியப்படுத்தியதையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

1-Rupee Idli: 1 ரூபாய்க்கு இட்லி விற்றுவந்த கோவை பாட்டிக்கு குவியும் உதவி- நெகிழவைக்கும் சம்பவம்!

கோவையின் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். பல ஆண்டுகளாக சுட சுட இட்லியை வெறும் 1 ரூபாய்க்கு விற்று வந்துள்ளார் கமலாத்தாள்.

வெறும் 1 ரூபாய்க்கு சுட சுட இட்லி விற்றுவந்த கோவையைச் சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு அரசு நெகிழவைக்கும் உதவியைச் செய்துள்ளது. 

கோவையின் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள். பல ஆண்டுகளாக சுட சுட இட்லியை வெறும் 1 ரூபாய்க்கு விற்று வந்துள்ளார் கமலாத்தாள். அவரைப் பற்றிய தகவல் சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலானது. 

தனது பணி குறித்து அவர், “வடிவேலம்பாளையத்திற்கு அருகில் இருக்கும் பலர் நடுத்தர வர்கத்தையோ, பொருளாதார நிலையில் பின்தங்கிய வர்கத்தையோ சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெரும்பான்மையானவர்கள் தினக்கூலிகளாகவே இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் காலை உணவுக்கு 15 ரூபாய், 20 ரூபாய் கொடுத்து அவர்களால் சாப்பிட முடியாது. எனவே, அவர்களை பசியைப் போக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் காரணமாகவே இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்கிறேன். இதிலும் எனக்கு லாபம் கிடைக்கிறதுதான். ஆனால், அது குறைவாகத்தான் இருக்கும்” என்று பணிவுடன் விளக்கினார். 

அவரைப் பற்றிய செய்தியை, மஹிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்தார். அந்தப் பதிவுடன், ‘கமலாத்தாள் தற்போது மர அடுப்புதான் பயன்படுத்தி வருகிறார். அவருக்கு எரிவாயு கொண்ட அடுப்பு வாங்கிக் கொடுக்க நான் தயார்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவும் வைரலானது. 

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவனம், கமலாத்தாளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கியதாக இன்று ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டை, பகிர்ந்து தகவல் தெரிவித்துள்ளது. 
 

இந்த செயல்தான் தற்போது பலராலும் மனம் விட்டுப் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனந்த் மஹிந்திராவும், பாரத் கேஸ் நிறுவனத்தின் செயலைப் பாராட்டியுள்ளார். மேலும் கமலாத்தாளுக்குத் தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கவும் தயார் என்றும் கூறியுள்ளார் மஹிந்திரா. 

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும், கமலாத்தளைச் சென்று பார்த்துள்ளது. அவர்களும் தங்கள் பங்கிற்கு, கமலாத்தாளின் சமையல் தேவைக்கு ஏற்றபடியான பெரிய பர்னர், பைப்பிங் இணைப்பை வழங்கியுள்ளனர். இதன் மூலம் கமலாத்தாள், தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்று இந்துஸ்தான் நிறுவனம் கூறியுள்ளது. 

நெட்டிசன்கள், கமலாத்தாளின் மனிதநேய சேவையையும், ஆனந்த் மஹிந்திரா சரியான நேரத்தில் அதை தெரியப்படுத்தியதையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

Click for more trending news


.