This Article is From Apr 21, 2020

சென்னையில் கடும் எதிர்ப்புகளை மீறி மருத்துவர் உடலை அடக்கம் செய்தது எப்படி?

அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில், மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதோடு, அந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

சென்னையில் கடும் எதிர்ப்புகளை மீறி மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்தது எப்படி?

ஹைலைட்ஸ்

  • கடும் எதிர்ப்புகளை மீறி மருத்துவர் உடலை அடக்கம் செய்தது எப்படி?
  • அப்பகுதி மக்கள் அவர்கள் மீது கற்கள், பாட்டில்களையும் வீசி தாக்கியுள்ளனர்
  • இந்த சம்பவங்கள் அனைத்தும் போலீசாரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
Chennai:

சென்னையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் மக்கள் சிலர் தடுத்து நிறுத்தியதோடு, ஆம்புலன்ஸ் மீதும், சுகாதார பணியாளர்கள் மீதும் தாக்குதலும் நடத்தினர். இதனால், சக மருத்துவர் ஒருவரே மருத்துவ பணியாளர்களின் உதவியோடு உயிரிழந்த மருத்துவரின் உடலை நள்ளிரவில் அடக்கம் செய்துள்ளார். 

மருத்துவர் சைமன் ஹெர்குலஸூக்கு அவர் சிகிச்சையளித்த நோயாளிகளிடமிருந்து, அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்ட சென்ற போது மக்கள் சிலர் கொரோனா வைரஸ் தங்களுக்கும் பரவும் என்ற அச்சத்தில், மருத்துவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதோடு, அந்த ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவர்கள் மீது கற்கள், பாட்டில்களையும் வீசி தாக்கியுள்ளனர். இதில், ஆம்புலன்ஸ் ஒட்டுநருடன், சில சுகாதாரத்துறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் போலீசாரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து, இரண்டு மயானங்களிலும் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து உடன் இருந்த மருத்துவர் பிரதீப் குமார் விவரித்துள்ளார். அதில், மருத்துவரின் உடலை வாகனத்தில் இருந்து வெளியே எடுத்து வைத்து கொண்டிருந்த இரண்டு ஆம்புலன்ஸ் ஒட்டுநர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடலை அடக்கம் செய்வதற்கான பணியில் இருந்த இரண்டு சுகாதார பணியாளர்களும், மேலும், 3 பேரும் இதில் பலத்த காயமடைந்தனர். 

இதையடுத்து, பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு, என்னுடன் இரண்டு மருத்துவ பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு, நானே ஆம்புலன்ஸை ஒட்டிக்கொண்டு மாயனத்திற்கு மீண்டும் சென்றேன். அப்போது, உடனடியாக சடலத்தை குழிக்குள் வைத்துவிட்டோம். எனினும், மீண்டும் வன்முறை நடக்குமோ என்ற பயத்திலே இருந்தோம். போலீசார் கூட எங்களுக்கு அருகில் வருவதற்கு மிகுந்த அச்சமடைந்தனர். 

அங்கு ஒரு மண்வெட்டி மட்டுமே இருந்தது. நான் அதனை ஒரு மருத்துவ பணியாளரிடம் கொடுத்துவிட்டேன். நானும் மற்றொரு மருத்துவ பணியாளரும் கைகளாலே 8-10அடிக்கு மண்ணை அள்ளி போட்டோம். 

இதனை முடிப்பதற்கு எங்களுக்கு ஒரு மணிநேரம் ஆனது. இறுதியில் நள்ளிரவில் 1.30 மணி அளவில் போலீசாரும் எங்களுக்கு உதவினர் என்று அவர் கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பாக 21 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது கலவரம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதனிடையே, காவல்துறையினர் போதுமான பாதுகாப்பை அனுப்பியிருக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அதிகாரிகள் தவறினால் "தக்க பதிலடி நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என இந்திய மருத்துவர்கள் சங்கமும் எச்சரித்துள்ளது.
 

.